Monday, December 28, 2009

காதல் மன்னன் ஆவது எப்படி? - ரொமான்ஸ் டீயுசன்



1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்... 

படைப்பு: கவிதையின் காதலன்

Sunday, December 27, 2009

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற கேள்விகள்

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.. 



1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?

6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?

7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?

10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா? 

(பி.கு) இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்..... அவ்வளவுதான் ?!

 உதவி: கவிதையின் காதலன்

Friday, December 4, 2009

அத்வானி - கிழக்கின் புத்தகம்

அத்வானி - காவிய நாயகனின் கதை

கிழக்கின் ஆர்.முத்துக்குமார் எழுதிய இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில சுவாரஸியங்கள்: 

அறிமுகம்


ரத்தபிரிவுக்கு அவரவர் விருப்பப்படி பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால் போதும்., அத்வானி  துளியும் யோசிக்க மாட்டார். என்னுடைய ரத்தபிரிவு ஆர்.எஸ்.எஸ் பாஸிட்டிவ் என்று பகிரங்கமாக சொல்லிவிடுவார். அத்தனை தீவிரமான் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அவர். என்ற ஆர்.முத்துக்குமாரின் எளிய அறிமுகத்தை வேறு யாரும் அவருக்கு இனி தர முடியாது., என்றே எண்ணுகிறேன்.

தனக்கு விருப்பமான் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்ற அடையாளத்தால் அதிகம் நேசிக்கப்பட்டவர் அல்ல அத்வானி. துவேஷிக்கப்பட்டவர். அதற்காக எந்த ஒரு தருணத்திலும் அவர் வருந்தியதே இல்லை.! ஏனெனில் அவரின் அடையாளம் அது! என்ற வார்த்தைகள் சத்தியம் நிறைந்தவை. 

இளமை காலம்

இன்றைய கராச்சி நகர், அன்றைக்கு சிந்து மாகாணம்., இந்த நிலப்பரப்பு தான் அத்வானியை நமக்கு தந்த பூமி. ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டோடு இருந்தவரை, அரசியல் களத்திற்கு அழைத்து வந்த பெருமை ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகாக்களையே சாரும். ராஜ்பால்ஜியின் வழிகாட்டுதலில் அவருக்கு போதிக்கப்பட்ட முதல் மந்திரம் நான் ஹிந்து.! ஹிந்து..!

பிரிவினை என்பதை அடியோடு நிராகரிக்கும் ஆர்.எஸ்.எஸ் மீது., அத்வானிக்கு ஈர்ப்பு அதிகரிக்க தொடங்கியது. அது தான் இன்று வரை ஆர்.எஸ்.எஸ் ஊழியராக வைத்திருக்கிறது. 

கோட்ஸே - ஆர்.எஸ்.எஸ் காரர் இல்லை


கோட்ஸே முதலில் ஆர்.எஸ்.எஸ்-ல் தான் இருந்தார். ஆனால் அவரின் வேகத்துக்கு இயக்கம் ஈடுகொடுக்கவில்லை என்பதால்.,கூடாரம் மாறினார். வீர் சாவர்க்கரின் ஹிந்த் மாகாணசபை அவரை வரவேற்று விருந்தே வைத்தது. மென்மையாக சொன்னால் கோட்ஸே ஒரு இந்து பக்தன். உண்மையை சொல்லபோனால் அவர் ஒரு இந்து வெறியன். இந்த ஒரு வரியே போதும்., திருக்குறள் மாதிரி ஓரிரு வரிகளில் ஆர்.முத்துக்குமாரின் நறுக்குகள் ரசிக்கவைக்கின்றன.

காந்தி கொலைக்கு காரணம்., அவர் முஸ்லீம்களை அதிகம் தாங்குவது தான் என்ற எண்ணம், ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., இந்து மாகாண சபை தொண்டர்களிடையே (பக்தர்களிடையே) இருந்தது. கோட்ஸேவின் வெறி பிரிவினையின் போது அதிகமானது.

1947-க்கு பிறகு இந்தியா வசம் 400 கோடி ரூபாய் இருந்தது. அதில் 75 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கொடுப்பதாக ஒப்பந்தமானது. உடனே 20 கோடி ரூபாயை கொடுப்பது, மீதி தொகையை நிறுத்தி வைப்பது என்று. ஆனால் காந்தி இதை கண்டித்து உண்ணாவிரதமிருந்தார்., பலன்: 55 கோடி ரூபாயும் உடனே வழங்கப்பட்டது. இது தான் உச்ச கட்ட கோபத்துக்கு காரணம். விழைவு: காந்தி கொலை. இதை விரிவாக கூறிய ஆசிரியர்., இந்த பணத்தை வைத்துக்கொண்டு தான் பாகிஸ்தான் இந்தியா மீது 1948-ல் படையெடுத்ததை கூற மறந்துவிட்டாரோ! அப்படி பார்க்கையில் கோட்ஸேவின் கோபம் சரியானது தானோ!!? 

அரசியல் பக்கம்


ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாரதிய ஜனசங்கம், ஜனதா மோர்ச்சா, ஜனதா என்று மாறி மாறி அவரின் அரசியல் பாதை மிக நீண்டது., ஆனால் வலிகளும் நிறைந்தது. உபாத்யாயாவிற்கு பிறகு கட்சியை வழிநடத்தும் பொருப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்திலிருந்தே மொரார்ஜி தேஸாய், சரண் சிங், வி.பி.சிங், சந்திர சேகர் என்று இவர் மீதும் பா.ஜ.க மீதும் ஏறி சவாரி செய்தவர்களே அதிகம். ஆனால் அவர்கள் கூட காரியம் முடிந்ததும்,  இவரையும் கட்சியையும் தூக்கி எரிந்த போதுதான்., வாங்கிய அடியின் வலியை கூட இவரால் உணரமுடிந்தது.

வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு  உயர்ந்தது. இப்புத்தகத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அத்வானியின் அரசியல் பக்கங்கள் தான். அந்த அளவுக்கு ஆழ்ந்த அரசியல் அனுபவம் அவருக்கு..!

எமர்ஜென்சி, மிசா காலத்தில் இருந்து மீண்டு., கட்சியை கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொருப்புகள் ஒப்படைக்கப்படும்., ஏனெனில் எதற்கும் கலங்காதவர் இவர்.திறமைசாலி., உறுதியானவர் என்று கட்சியில் அனைத்து தரப்பினரிடமும் பெயரெடுத்தவர்.

ராமர் ஆலயம்


பஜனை செய்வதற்காகவோ, கீர்த்தனை பாடுவதற்காகவோ அயோத்திக்கு செல்லவில்லை. அந்த இடத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்வதும் நோக்கம் இல்லை. கரசேவை. கரசேவை. அது மட்டும் தான் ஒரே இலக்கு.
1992-ல் அத்வானி கூறியது இது தான்.

தேர்தலில் வெற்றி கிடக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கோஷத்தை உச்சஸ்தானியில் ஒலிக்க தொடங்கினார் அத்வானி. அது தான் நேரம், உ.பி-யில் பாஜக ஆட்சி. வேறு என்ன வேண்டும். தொடங்கினர், ரத யாத்திரையை, குமிந்தனர் ஹிந்துக்கள் அயோத்தியில். பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கே ராமர் ஆலயம் கட்டும் பணி கரசேவைக்காக...!

எல்லோரு எதிர்பார்த்தது போல்., பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது டிச.6.  தேசிய அவமானம் என்றார் அன்றைய பிரதமர் நரசிம்மராவ். ஆனால் அதற்கு நரசிம்மராவின் மௌனமும் முழுக்காரணம் தான்., இதை பதிவு செய்ய ஆசிரியர் ஏன் மறந்தார்?!! அத்வானி மீதும், பாஜக மீதும் மட்டுமே குற்றம் சுமத்துகிறார்., தற்போதைய லிபரான் கமிஷன் அறிக்கை போன்று. ஏன் என்று தெரியவில்லை. 

எமர்ஜென்சி காலம்

இதற்கு முந்தைய பக்கங்களில் இந்திராவின் எமர்ஜென்சி, மிசா கொடுமைகள் பற்றி மிக..........மிக........ விரிவாக் விவரித்து உள்ளார். அதில் தெளிவாக நடுநிலையுடன் விவரித்துள்ளார். காமராஜ் பற்றியும் சில வரிகளில் தமிழக அரசியல் எட்டிப்பார்க்கிறது. அத்வானி பற்றிய மிசா கொடுமைகள் சொல்லப்படவில்லை. எதிர்கட்சியினர் 1,10,000 பேர் கைது, 253 பத்திரிக்கையாளர்கள் கைது, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் உரிமம் ரத்து போன்ற கொடுமைகளை பற்றி விரிவாக சொல்லவில்லை.

அத்வானிக்கு பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்தவர், எடுத்த வேகத்திலேயே முடித்துவிட்டார். ஏன் ? இன்னும் கூட சில பல பக்கங்களில் எழுதியிருக்கலாம். 

உறுதியான மனிதரை உலுக்கியவை

ஹவாலா மோசடி வழக்கில் சிக்கியது, அவரது வாழ்வில் ஏற்பட்ட முதல் சறுக்கல். அதை சமாளிக்க அவர் பதவியை ராஜினாமா செய்தது, குற்றமற்றவர் என நிரூபித்தது சூப்பர்.


ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல டிச,1999 -ல் நடந்த காந்தஹார் விமான கடத்தல் அரசின் அஸ்திவாரத்தையே உலுக்கியது என்பது உண்மையான உண்மை. தீவிரவாதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவித்து தான், 831 பயணிகளை மீட்டார். இந்த விவகாரம் மிஸ்டர்.கம்பீரம் இமேஜை காலிசெய்தது.

இத்தோடு போகவில்லை, நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் நடத்தப்பட்ட தாக்குதல், மேலும் அவரின் மன உறுதியை பாதித்தது. அதற்காக தீவீரவாதிகளை ஒடுக்கும் நோக்குடன் இவர் கொண்டு வந்த பொடா சட்டம் தேசிய அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் திட்டத்தின் சூத்திரதாரி அப்சல் குரு, இன்னும் தூக்கிலிடப்படாதது இச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்ப்பதே காரணம். இது மேலும் மும்பை தாக்குதல் 26/11 போன்ற கொடூரங்களுக்கு வழிவகுக்கும்.

ஜின்னா ஒரு தியாகி  - அத்வானி


ஜின்னா ஒரு துரோகி, அவரை பாராட்டி பேசியவரும் துரோகியே! என கட்சிக்குள்ளும், வி.ஹெச்.பி போன்றோரிடமும் கலகக்குரல் ஒலிக்கத்துவங்கியது. இது பற்றிஅத்வானி கூறியது: ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது, ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை. நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பாவம்!!


இப்புத்தகம் பா.ஜ.க-வின் மிகப்பெரிய சாதனையான பொக்ரான் அணு ஆயுத சோதனையில் அத்வானியின் பங்கு பற்றி துளியும், மருந்துக்கு கூட விவரிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் கார்கில் போர் வெற்றி பற்றி மூச்சே விடவில்லை. விடுதலைக்கு பின் நடைபெற்ற போர்களில் நம் இந்திய தேசம் பெற்ற ஒரே போர்  வெற்றி : கார்கில் போர் தான்., அது பற்றி விபரங்கள் இல்லாதது ஓர வஞ்சனை.!! தான். மூன்றாவது குஜராத் கலவரம்.! இது அத்வானிக்கு ஒரு சர்சையை உண்டு பண்ணிய விவகாராம். வாஜ்பாய் - அத்வானி இடையே கூட கருத்து வேறுபாடு ஏற்பட்ட விவகாரத்தை ஓரிரு பக்கங்களில் முடித்திருப்பது ஏமாற்றம்.


 இருந்தாலும் அத்வானி - அரசியல் - வெற்றி - தோல்வி -ஆர்.எஸ்.எஸ். ஊழியர் - கோட்ஸெ - இந்திரா - என்று 1947 முதல் 2009 வரை ஓரளவுக்கு அலசியிருக்கிறார்., ஆசிரியர் ஆர்.முத்துக்குமார். என்னதான் ஒருவருடைய வாழ்க்கை வரலாறு பெருமையாக பல விஷயம் எழுதினாலும், விமர்சனம் எழுதுவோருக்கு குறை மட்டுமே கண்ணுக்கு தெரியும்.! நான் என்ன பண்ண., என்னுடைய (ஆசிரியரின்) பணி இதுவே!!   இப்புத்தகம் அத்வானி பற்றிய முழுமையான அரசியல் சாசனம் (எனக்கு தெரிந்த உவமை)


அத்வானி - சில வரிகள் 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ரதயாத்திரை கிளம்பிய போது இருந்த அதே வேகம் அத்வானியிடம் இன்னமும் இருக்கிறது. வீரியம் அப்படியே இருக்கிறது. நம்பிக்கை அப்படியே இருக்கிறது. 
என்ன ஒன்று..
அவருடைய கொள்கைகளும் அப்படியே இருக்கிறது..!

அது தான் கொஞ்சம் உதைக்கிறது......!!!



புத்தகம்: அத்வானி
ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 80/-


இப்புத்தகத்தை வாங்க:  அத்வானி - காவிய நாயகனின் கதை