Monday, January 25, 2010

காதலை சரியான நேரத்தில் சொல்லு.!


சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு.

ஆனால் காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள். 

உங்கள் காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான் நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும். 

அவரும் நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும் உண்டு. 


கல்லை எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும் என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும். 

உங்களுக்கு இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.

சாதாரண நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது. 


 நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.

சரியான நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல் ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி கப் தான் கையில் மிஞ்சும்.

Sunday, January 17, 2010

காதலிப்பது எப்படி?


பசங்களுக்கு: 

முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி? 

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு! 

இரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும். 


இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி ... தானா வரும். 

மூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும். 


நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) "நான் உன்னை காதலிக்கின்றேன்" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம். 

நான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய. 


கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா. 

ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா.. 

Please go to step one.


சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன ;)


பெண்களுக்கு: 

பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.!??

Sunday, January 10, 2010

விஜயகாந்த் - கிழக்கின் புத்தகம்

விஜயகாந்த் - சினிமா கலைஞர், புரட்சி கலைஞரான வரலாறு

பெரும்பாலும் ரஜினிக்கு பிறகு இருந்து அஜித், விஜய் நடிக்க வரும்வரை இருந்த காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின் பிடித்தமான ஹீரோ விஜயகாந்தாக தான் இருப்பார். அதுவும் என்னைப் போன்று தென்மாவட்டத்துக் காரர்களை கேக்கவா வேணும்....

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் பிடிக்காத தீவிரவாதிகளே கிடையாது, படத்தில்.. அது மட்டுமல்லாது தமிழில் குடும்பத்துடன் பார்க்கும் சில நடிகர்களின் திரைப்படங்களில் இவரது படங்களும் உண்டு. ஆக்‌ஷன் படம் வேறு. குழந்தைகளுக்கு ஒரே குதூகலம் தான் போங்க. அப்படி விஜயகாந்தை ஒரு நடிகனா பார்க்காமல் நாட்டை காப்பாற்றும் ஒருவராக பார்த்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்று அது முடியவில்லை... ஏனோ ?!


சரி. இந்த புத்தகத்துல யுவகிருஷ்ணா என்ன சொல்லியிருப்பார்னு பாக்கலாம்னு, கிழக்கு பிரசன்னாவுக்கு மெயில் அனுப்பி புத்தகத்தை வாங்கினேன்.  பலருக்கு பிடிக்காத ஒருவர் (விஜயகாந்த் தான்)  பற்றி படிக்கும் அலுப்பே தெரியாதவாறு இருந்தது புத்தகத்தின் நடை. அவ்வளவு எளிமை, ஆங்காங்கே காமெடி டிராக்குகள், சினிமா பாடல்களின் ஹம்மிங்குகள் வேறு...

ஆசிரியர் பற்றி: எதையும் எளிமையாக சொல்லும் யுவகிருஷ்ணாவின் அழகே இந்த புத்தகத்தின் புதுமை, பெருமை. படிக்ககூட சோம்பேரி படும் ஆட்களையும் கவரும் ஆற்றல் கொண்டது, இப்புத்தகம். போதும்னு நெனக்கிறேன்... உபரி தகவல் ஆசிரியர் ஒரு திமுக காரர். அந்த வாடை ஒரு இடத்தில் கூட இல்லை. ஒரிஜினல் தேமுதிக காரன் கூட இவ்வளவு ரசிக்க மாட்டான். ஆனால் விஜயகாந்த தலைவர் பிரபாகரனோடு ஒப்பிடும் இடங்கள் தான் இடிக்கிறது, தவிர்த்திருக்கலாம்....

புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்:  

விஜயராஜ் (இயற்பெயராம்) மதுரையில் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதியின் மூன்றாம் குழந்தையாக பிறந்தவர். இளம் வயதில் முட்டு சந்து நாடார் கடைல பல்பம் வாங்கி திண்பது, தீப்பெட்டி சீட்டு, கோலி, கில்லி ஆடுவது இவரின் வாடிக்கை. நம்மைப்போல இருக்கார்ல. மதுரை தாவணிகளை கவருவதற்காக கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டுவது பிடித்தமானது... ஆனாலும் அண்ணன் ஒரு பூந்தோட்ட காவல்காரன்.

காதல் மன்னன் ஆனது எப்படி ?


ப்படி புயலாய் போய்ட்டு இருந்தவர் வாழ்வில் இந்தி போராட்டம் வந்துள்ளது., அதனால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ரைஸ்மில்லை பார்க்க போய்ட்டார். அங்கதான் அந்த மேட்டர் நடந்துருக்கு... இது இன்ன வரைக்கும் யாருக்கும் தெரியல...

தலைவர் மில்லு பக்கத்துல இருக்குற ஒரு டீ க்கடைல நின்னு தம் பத்த வைக்கிறது வழக்கம். அந்த ஸ்டைல பாத்து எதிர் வீட்டி ஜன்னல் ஒண்ணு (கண்கள் இரண்டால்  ’ஸ்வாதி’ மாதிரின்னு வச்சுக்குங்களேன்) பிக்கப் ஆயிடுச்சு. அதுக்காக எப்பயும் நம்பியார் மாதிரி இருக்கும் அண்ணன் பூப்போட்ட சட்டை & பெல்ஸ் பேண்டு கணக்கா மில்லுக்கு வரப்போக மாறிட்டார். இங்க தான் கதைல ஒரு டுவிஸ்டே..! பாவம் திடீர்னு ஒரு நாள் எதிர்வீட்டு ஜன்னல் திறக்கவே இல்லை. விசாரிச்சு பார்த்தா அது லீவுக்கு வந்த குயிலாம். அதான் பறந்து போயிடுச்சு. அண்ணன் தான் பாவம் மனசு உடைஞ்சு போயிட்டாராம். இது மாதிரி அவர் வாழ்க்கைல இன்னும் 2 காதல்களும் வந்து போயிருக்கு..!?

சினிமாவில் நுழைந்தது எப்படி ?


மதுரைல சேனாஸ் சினிமா கம்பெனி  வச்சிருந்த மர்சூக் & எம்.ஏ.காஜா, இந்த 2 பேரும் தான் கேப்டனின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டவர்கள். பின்பு எஸ்.ஏ சந்திரசேகர் இவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். அதனால் தான் இன்னமும் தான் அர்ச்சனை செய்யும் போது சந்திரசேகர் பெயருக்கும் சேர்த்தே அர்ச்சனை செய்து வருகிறார். இன்னொருவர் இவரது நண்பர் அ.செ. இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர்களாக உள்ளனர். அதனால் தான் வேறு மொழிப்படங்களை ஒத்துக்கொள்ளாதவர் இவருக்காக ’மே டே’ என்ற ஆங்கிலப்படத்திற்கு பூஜை போட்டார்., அதுவும் வெளிவரவில்லையாம்.

தமிழ் சினிமாவின் முதல் 3-டி படமான அன்னைபூமி யின் ஹீரோ சாத்சாத் விஜயகாந்தே.! 1984-ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். அதில் சில... சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் மற்றும் ஆபாவாணன் இயக்கிய உரிமைக்குரல். என நடிப்பில் பல பரிணாமங்களை காட்டிய ஆண்டு அது. அந்த ஆண்டே கலைஞர் கையால் ஷீல்டு வாங்கினார்., அன்றிலிருந்து கலைப்புலி தாணுவால் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டார். அதுவே இன்று உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் அறியப்படுகிறது...

எம்.ஜி.ஆரும் கறுப்பு எம்.ஜி.ஆரும்



விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். ஆனால் அவரால் எம்.ஜி.ஆர் கூட சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனோ?? திமுக பக்கம் ஓவரா சாய்ந்ததாலோ என்னவோ?  தெரியல..

ஆனால் வி.என்.ஜான்கி அம்மையாரோடு நல்லா பழகியவர் கேப்டன். தன் பிறந்த நாளுக்கு வருஷா வர்ஷம் 50ஆயிரம் ரூபாய் ராமாவரம் காது கேளாதோர் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்து வர்றார். அந்த மதிப்பின் காரணமா தான் எம்.ஜி.ஆர். பயன்படுதிய பிரச்சார வேனை அன்பளிப்பா கொடுத்தாங்கலாம்.

இது மட்டும் இல்லீங்க... வாரம் 300 பேருக்கு ஞாயிற்றுகிழமை அன்னிக்கு  அன்னதானம், வருஷா வருஷம் இலவசமா ஏழைகளுக்கு திருமணம், கார்கில்லுக்கு 5 இலட்சம்., ஒரிசாவுக்கு 2 இலட்சம்., குஜராத் பூகம்ப நிதிக்கு 2 இலட்சம்., ஆந்திரா புயலுக்கு 2 இலட்சம்., சுனாமி நிவாரணமா தமிழ்நாட்டுக்கு 11 இலட்சம், பாண்டிசேரிக்கு 2 இலட்சம்., கும்பகோணத்துல உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா 1 இலட்சம்., இப்ப கூட இலங்கைக்கு 6 இலட்சம்னு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் கேப்டன் விஜயகாந்தோடது...

அதனால தான் அவரை கறுப்பு எம்.ஜி.ஆர்-னு தேமுதிக காரங்க கூப்பிடுறாங்க., நாமளும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்., அதுல ஒண்ணும் தப்பில்ல. தமிழ்நாட்டுல சம்பாதிச்சு வேற மாநிலத்துல் சொத்து வாங்கி குமிக்கிறவங்க மத்தில தமிழனுக்காக மட்டுமில்லாம மத்தவங்களுக்காகவும் இறக்கப்படுற நம்ம கேப்டன் எவ்வளவோ பரவாயில்ல...

கேப்டனும் பிரபாகரனும்


விஜயகாந்தும் தலைவர் பிரபாகரன் மீது பற்று கொண்டவரே. அதனால தான் ஈழத்தமிழர்கள் இன்னல் தீரும்வரை  தான் பிறந்த நாளே கொண்டாட போவதில்லை என்று கூறியவர். மேலும் 60 பேர் தாயகம் திரும்ப பல உதவிகளை செய்தவர்.

பலர் எதிர்த்த போதும் தன்னுடைய 100வது படத்துக்கு ’கேப்டன் பிரபாகரன்’ என்று பெயரிட்டவர். தன்னுடைய மகனுக்கும் கூட அப்பெயரே வைத்தார். இப்படி இருந்தவர் டெல்லி சென்று திரும்பிய பின் பேச்சு மூச்சே இல்லாமல் போய்விட்டார்.. என்னுடைய வருத்தமும் அது தான். அவரும் சேர்ந்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தால் இன்னும் அடிவாங்கியிருக்கும் காங்கிரஸ்...

[கலைஞர் மாதிரி இன்னவரைக்கும் தலைவர் பிரபாகரன பிடிக்காமலேயே அவர பிடிச்ச மாதிரி நடிக்கிறாரோ என்னவோ?]


அதிரடி இமேஜ்



விஜயகாந்த் - தேமுதிக வின் தலைவர் ஆனார் செப்டம்பர் 24, 2005 இல். அன்று முதல் ஓயாத உழைப்பு., அரசியல் இடையில் சினிமா (சூட்டிங்) என்று சுழன்று கொண்டே இருக்கிறார். இடையில் எத்தனை சாதனைகள், சறுக்கல்கள்.. அவரது வாழ்க்கை போன்றே. எதற்கும் அஞ்சாதவர் அவர். முதல் தேர்தலிலேயே 8.2 % பெற்று 43 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பாதித்தார்.

மதுரை இடைத்தேர்தலில் 20% வாக்குகள் பெற்று அதிமுகவிற்கே சவால் விட்டார். ஆனால் திருமங்கலம், 2009 பாராளுமன்ற தேர்தல்கள் விஜயகாந்த நினைத்தது போல அமையவில்லை. அதனால் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். பாவம் அவர் என்ன செய்வார் பணம் பாதாளம்வரை பாயும்போது எங்கேபோய் மோதிக்கொள்ளும் போது ?!

 திமுக., அதிமுக தவிர்த்து மூன்றாவது  சக்தி என்ற ஒன்று  உருவாகாமல் போனதற்கு கட்சிகள் தான் காரணமே தவி, மக்கள் ஒன்றும் காரணம் அல்ல. தனித்தன்மையோடு தனித்து நின்று ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று சொல்ல கூடிய தைரியமும், பொறுமையும் எந்தக்கட்சிக்கும் இல்லாமல் போனதனலாயே மூன்றாவது சக்தி உருவாகமிடியவில்லை. - என்ற ஆசிரியரின் வரிகள் கூர்மையானவை. (பாக்கப்போனா நடக்குறத பார்த்தா, இந்த வரிகள் பொய்ச்சு போயிடுமோனு பயமா இருக்கு)


இப்புத்தகம் விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கையை முழுமையாக கவர் செய்யவில்லை. எந்த ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகமும் அவர்களின் சுயசரிதையாக இருந்தால் மட்டுமே அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஆதலால் இந்த புத்தகம் நிச்சயமாக வாசகர்கள் அனைவரின் அலமாரியிலும் இருக்க வேண்டிய வருங்கால முதல்வரின் வாழ்க்கை குறிப்பு... 


புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கு செல்லவும்: விஜயகாந்த்

ஆசிரியர்: யுவகிருஷ்ணா

பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

விலை: ரூ.70


Sunday, January 3, 2010

சமச்சீர் கல்வி - அரசும், ஆசிரியர்களும்




பாரதி பாடிய ‘வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ?’ எனும் வரிகளைத் தமிழர்கள் பலரும் மறந்துவிட்டோம். ஆனால், எப்போது நினைத்தாலும் மனசைப் பிசையும் அந்த ஏக்க வரிகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதாகத்தான் இன்றைய தமிழகத்தின் கல்விச் சூழல் இருக்கிறது! பாரம்பரியம் மிகுந்த – பண்பாட்டுக்குப் புகழ்பெற்ற -- நமது தமிழ்ச்சமுதாயத்தில் மிகுந்துவரும் இன்றைய சிக்கல்களை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு, இவர்கள் கற்ற கல்வியே முதன்மைக்காரணமாக உள்ளது. ‘மெக்காலே’கல்விமுறை இவர்களைச் சமுதாயத்திலிருந்து பிரித்து, ‘தனக்குத்தேவையானதை அறிந்திருப்பதே அறிவு’ என்று நம்பவைத்துவிட்டது.
மனப்பாடக் கல்வி என்பதே, ‘தனித்தே மனப்பாடம் பண்ணி, மதிப்பெண்களை அள்ளுவது’தானே? இதை மாற்றுவதுபற்றி, பற்பல ஆண்டுகளாக அறிஞர்கள் பற்பலர் பல்வேறுபட்ட கருத்துகளைச் சொல்லிச் சொல்லி அசந்து போனார்கள். கடைசியாக இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற சமச்சீர் கல்வி இதற்கொரு நல்ல தீர்வைத் தரும் என்னும் நம்பிக்கையை எழுப்பிவருகிறது. ஆயினும்கூட முழுமனசாகவோ அரை மனசாகவோ தமிழகஅரசே முன்மொழிந்திருக்கும் இந்த நல்ல திட்டத்தை அரசே ‘கிடப்பில்போட’க்கூடிய அளவிற்குப் பல விஷயங்கள் நடந்து வருகின்றன என்பதுதான் இப்போது மேலோங்கி வரும் நமது கவலை.

சமச்சீர் கல்வியால் பயன்பெறப்போவது எதிர்காலச்சமுதாயம்தான் என்பதால் ‘இன்றைய பலனில்’ மட்டுமே குறியாகஇருக்கும் அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெற்றோர்களுக்கு இதன் பயன் இன்னும் சரியாகப் புரிபடவில்லை. மாணவர்களுக்குப் புரிய இன்னும் சில ஆண்டுகளாகும். ஆனால் புரிந்துகொள்ள வேண்டிய ஆசிரியர் சமுதாயம் என்னசெய்கிறது?

தனிப்பட்ட காவலர்களைவிடத் திருடர்கள் கூட்டம் எப்போதுமே ‘அட்வான்சாக’ இருக்கும் என்பது உலக உண்மை! அதுதான் சமச்சீர் கல்வி விஷயத்திலும் நடந்து வருகிறது! சமச்சீர் கல்வி தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்தபோது, ஆங்காங்கே அவர்களைச் சந்தித்து, கட்டுக்கட்டாக இதன் ‘தீமை’களைப் பற்றி எழுத்துவடிவத்தில் கொடுத்தவர்கள் ‘மெட்ரிக்’ பள்ளிகளின் தாளாளர் பெருமக்களே! சமச்சீர் கல்விக்கான ஆதரவுக் கருத்தைவிடவும் எதிர்ப்புக் கருத்தே அதிகமாக வந்ததைக் கண்டு அவர்களே திகைத்துப் போயினர் எனும் செய்தி சோகமானது என்பதைவிடக் கேவலமானது என்றுதானே சொல்லவேண்டும்?

சம்பளக்கமிஷன் அறிக்கை குறித்துக் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒருபங்கைக் கூட சமச்சீர் கல்வி அறிக்கை குறித்து ஆசிரியர் அமைப்புகள் காட்டவில்லையே! ஏன்?!?  சம்பளக் கமிஷன் அறிக்கை குறித்து ஆசிரியர் அமைப்புகள் அக்கறை காட்டுவதை நான் குறை கூறவில்லை. அது ஆசிரியர்களின் உரிமை சார்ந்தது, நியாயமானதும்கூட.

எத்தனையோ போராட்டங்களை இணைந்து நடத்தியிருக்கும் ஆசிரியர் அமைப்புகள், தமது சமுதாயக் கடமையைச் சரியாகச்செய்யக் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, ‘சமச்சீர் கல்வியை உடனே செயல்படுத்துக’ என்று, மாநில அளவில் ஒரேகுரலில் எதையும் செய்யவில்லையே! ஏன்?

அரசை எதிர்த்துக்கிளம்பும் ஆவேசஅமைப்புகள் ‘சமச்சீர்கல்வி எதிர்ப்பாளர்’களை எதிர்த்துச் சிறு சத்தம்கூட எழுப்பவில்லையே, ஏன்? அண்மையில் கடந்த 24-10-2009 சனிக்கிழமை அன்று மாநிலஅளவில் நடந்த ‘பத்துஅம்சக் கோரிக்கை’ பேரணியில்கூட பத்தாவது கோரிக்கையாகவே (‘சப்ஸ்டிட்யூட’ போல) சமச்சீர் கல்வி இடம்பெற்றதே! ஏன்? இது ‘பத்தோடு பதினொன்றுதான்’என்றுசொல்லாமல் சொல்கிறார்களா?

சங்கத்தலைவர்களின் அறிக்கையில்மட்டும் அவ்வப்போது சமச்சீர்கல்விஆதரவு இடம்பெற்றால் போதுமா?  ஆங்காங்கே சில கருத்தரங்கம் நடத்தியது மட்டும் போதுமா? அல்லது பணப்பலனுக்காகவோ ஆசிரியர் சிலரின் உரிமைக்காகவோ நடந்த மாவட்ட ஆர்ப்பாட்டங்களில் தலைவர்கள் சிலர் சிலநிமிடம் சமச்சீர் கல்வி பற்றிப் பேசியது மட்டும் போதுமா? அனைத்து ஆசிரியர் அமைப்புகளும் இணைந்து, மக்களையும் சேர்த்துக்கொண்டு இதற்கென்றே மிகப் பெரிய இயக்கங்களை நடத்த, என்ன தடை?

நல்லாசிரியர் விருதுபெற்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் இந்தத் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார்கள்? அவர்கள்கூட சமச்சீர் கல்வி குறித்து ‘வாய்மூடி மௌனிகளாக’ இருப்பது ஏன்? ஒருவேளை எப்போதுமே மௌனமாக இருப்பதற்காகத்தான் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறதா?

கல்விக் கடமையைச் சரியாகச் செய்யும்போதே சமுதாயத் கடமையையும் சேர்த்துச் செய்ததற்காகத்தான் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்வி சார்ந்த சமுதாயக் கடமை என்றால் ‘சமச்சீர் கல்வி’யை நடைமுறைப் படுத்த உதவுவதைவிட வேறென்ன சமுதாயக் கடமை நல்ல ஆசிரியர்களுக்கு  இருக்கமுடியும்? இப்போது மெட்ரிக் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, தமது பிள்ளைகள் படித்துவரும் ‘தரமான மெட்ரிக்’ கல்விக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தால் பாதிப்பு வந்துவிடுமோ எனும் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதேபோல, சமஸ்கிருதம் மற்றும் அரபி மொழிகளை ஓரியண்டல் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, தமது பாரம்பரிய மதவழி மொழிக்கல்வி மதிப்பிழந்துவிடுமோ எனும் அச்சமும் எழுந்திருக்கிறது. இந்தச் சந்தேகத்தையும் அச்சத்தையும் போக்கி, அவர்கள் விரும்பும் மதஉரிமையோடும் மதவழி மொழியோடும் தமிழ்நாட்டில தமிழ்மொழியைப் படித்தாகவேண்டிய அவசியத்தையும், சமச்சீர் கல்வியின் நன்மைகளையும் உணர்த்தவேண்டிய அவசியம்  உள்ளதே. இதை அரசும் ஆசிரியர்களும்தானே செய்யமுடியும்?

பத்தாம்வகுப்பு வரை எந்தவகைப் பள்ளியில் படித்தாலும் 11,12ஆம் வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தில்தான் படித்தாக வேண்டும்.  ஏற்கெனவே ஒன்றாம்வகுப்பு முதல் பத்தாம்வகுப்புவரை தமிழ்ப்புத்தகம் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது எனவே மற்ற பாடப்புத்தகங்களும் ஒன்றுபோலவே இருப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது என்று எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வார்கள். அதாவது தற்போது தமிழ்நாடு முழுவதும் 11, 12 வகுப்புகளில் இருப்பதுபோல அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான தரமான பாடப்புத்தகம் ஆரம்பமுதலே வந்தால் பெற்றோர் வேண்டாமென்றா சொல்வார்கள்? அரசும், ஆசிரியர்களும் எடுத்துச்சொன்னால், நிச்சயம் ஒத்துழைப்பார்கள்.

அரசுப்பள்ளி, மெட்ரிக்பள்ளி, ஆங்கிலோ இந்தியன்பள்ளி, மற்றும் சமஸ்கிருத / அரபி ஓரியண்டல் பள்ளி என நால்வகைப் பள்ளிகளின் பத்தாம்வகுப்பு மாணவர்க்கு நால்வகைப் பாடப்புத்தகங்கள் போலவே தேர்வுகளும் மதிப்பெண் பட்டியல்களும் இதுவரை நான்கு வகையாகத்தான் இருந்துவந்தன. இந்த வழக்கம் கடந்த ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டது, அதாவது ‘சமச்சீர்கல்வியின் முதல்கட்டமாக, எந்தவகைப் பள்ளியில் எத்தனை மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதினாலும் அரசுப்பள்ளிபோல 500 மதிப்பெண்ணுக்கே மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, சமச்சீர் கல்விக்கு முன்னோட்டமாக ‘சமச்சீர் மதிப்பெண் பட்டியல்’ வந்துவிட்டது! 11ஆம் வகுப்புக்கு வரும்போது நால்வகைக் கல்விமுறையும்தான் ஒன்றாகிவிடுகிறதே! இந்த முதல்கட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய பள்ளிக்கல்வித்துறையை சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள் மனதாரப் பாராட்டினார்கள். வழக்கம் போல் எதிர்ப்பாளர்கள் நொந்துபோனார்கள்!

அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம்  வகுப்பிற்கும் சமச்சீர் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் எழுதுவதற்கான பணியைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை தற்போது தொடங்கியிருக்கிறது. இங்குதான் ‘தமிழக அரசின் கல்வித்துறையிலும் ‘சமச்சீர் கல்வி எதிர்ப்பாளர்கள் சிலரின் சமர்த்தான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றனவோ எனும் சந்தேகம் எழும்படியாக சிலநிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

ஏற்கெனவே தமிழகஅரசு நடத்திவரும் ஆரம்பப் பள்ளிகளில் முதல் நான்கு வகுப்புகளுக்குப் பாடநூல்களுக்குப் பதிலாக விளையாட்டுமுறை அட்டைகள் வழியும், ஆடல் பாடல் கதைகள் வழியாகவுமே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பாடநூல் உண்டென் றாலும் முன்புபோல் அவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பேரா.முத்துக்குமரன் குழுவினர் தந்திருக்கும் சமச்சீர்கல்வி அறிக்கையிலும் ஆரம்ப வகுப்புகளுக்குப் பாடநூல்களை விடவும் செயல்வழிக் கற்றலுக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனாலும் கூட, ‘அடுத்த ஆண்டுமுதல் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம் வகுப்பிற்கும், சமச்சீர்கல்வித் திட்டம் நடைமுறைக்குவரும்’ என்று அறிவித்திருக்கும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, ‘ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான பாடநூல் தயாரிக்கும் பணிகளை மட்டும் தொடங்கியது’ எப்படி? சமச்சீர்கல்வி அடிப்படையில் அட்டைகள் தயாரிக்கும் திட்டம் என்றால் சரி. பாடநூலுடன்.... என்ற சமச்சீர்கல்வி அடிப்படையில் 'பாடநூல் தயாரிப்புமட்டும்' நுழைந்தது’ எப்படி? இதில் பாடநூல் எழுதுவோர்க்கும் ‘தேர்வு’ நடத்தப்பட்டது பெரிய நகைச்சுவை!

பாடத்திட்ட மாற்றம், பள்ளிச்சூழல் மாற்றம், தேர்வுமுறை மாற்றம், அண்மைப்பள்ளி, தாய்மொழிவழிக் கல்வி ஆகியவற்றோடு வரும் சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்தும்போது, பாடத்திட்ட மாற்றத்திலேயே குழப்பமென்றால் எப்படி?  பள்ளிக்கல்வித்துறை, பாடத்திட்ட மாற்றக் கருத்துருவை இணையதளத்தில் இட்டுவைத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாடநூல் மாற்றம் தவிரவும் பார்க்கவேண்டிய சமச்சீர் கல்வித்திட்டப் பணிகள் பலஉள்ளனவே! ‘இது வழக்கமான பாடநூல் மாற்றம்தான், நாம் அஞ்சத்தேவையில்லை’ எனும் எதிர்க்கருத்தை மாற்றிட, சமச்சீர் கல்விக்கு உரிய மற்ற திட்டப்பணிகளையும் உடனே தொடங்கவேண்டும். இது தமிழக அரசின் கையிலேயே உள்ளது.

இதோடு, ‘மெட்ரிக்பள்ளிக் கல்வி முறையும், ஆங்கில வழியும் தொடரும் என்று பள்ளிக் கல்வி அமைச்சரே பேசியிருப்பதான ஒரு குழப்பத்தகவலும் வருகிறது. அரசும்,ஆசிரியர்களும் மௌனம்கலைத்து, கலந்துபேசிச் செயல்படவும் அதில் உறுதிகாட்டவும் வேண்டும். கல்வியாளர்கள் வசந்திதேவி, எஸ்.எஸ். இராஜகோபாலன் என ஒருசிலரே இதுபற்றிப் பேசுகிறார்கள். சமூக அக்கறையுள்ள ஆசிரியர்கள்--சங்கங்கள், பெற்றோர்கள், கல்விஅலுவலர்கள்,  சமூகஆர்வலர்கள் கலை-இலக்கியவாதிகள் எனப் பலரும் பங்களிக்க வேண்டிய நேரமல்லவா இது? இல்லாவிடில் வாராது போல்வந்த மாமணியாம் சமச்சீர்கல்வியைத் தமிழர்கள் தோற்றுவிடுவோமோ?’ என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது!

 சமச்சீர் கல்வி என்பது, வெறும் கல்விக்கானதல்ல, சமத்துவ சமூகத்துக்கானது என்பதைப் புரிந்து கொண்டு, அனைவரும் இணைந்து விரைந்து செயல்பட்டால் கல்விமாற்றம் மட்டுமல்ல சமூகமாற்றமும் சாத்தியம் தான்!