Tuesday, January 25, 2011

கல்லும் காரணங்களும்

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதி சந்திப்பு

வீதிக்கு வந்து
உன் மீது
கற்களை வீசுவதற்கான
காரணங்கள்
எம்மிடமும் நிறையவே இருக்கின்றன..

எம் உறவுகள்
அங்கே
செத்து மடிந்த போது
நாதியற்ற நாங்கள் -
உன்
உதவியை நாடினோம்
கதறினோம்
துடித்தோம்.

நீயோ
எம்
எதிரியோடு சேர்ந்து
எம் இனத்தை அழித்தாய்.!

முப்போகம் பயிரிட்ட
நாங்கள்
ஒற்றைப் போகத்திற்கு
நீர் வேண்டி
நீதி கேட்டோம்
உன்னிடம்

இங்கேயும் நீ
எதிரியின் பக்கமே
இருக்கிறாய்..

எம் உரிமைத் தீவை
எதிரிக்குக் கொடுத்தாய்..

மீளாத் துயரத்தோடு

மீன் பிடிக்கச் செல்கிறான்
எம் சகோதரன்

அவனை
அழிக்கிறான்
அடிக்கிறான்
அசிங்கப்படுத்துகிறான்

இப்போதும் நீ
எதிரியின் பக்கமே
இருக்கிறாய்

ஒற்றை வரியில்
சொல்கிறாய் நீ
எம் எதிரிகள் யாவரும்
உன் நண்பர்களென்று.

நாங்கள்
வேறென்ன சொல்வது -
வீதிக்கு வந்து
உன்மீது
கற்களை வீசுவதற்கான
காரணங்கள்

எம்மிடமும்
நிறையவே இருக்கின்றன
என்பதைத் தவிர.!

டிஸ்கி : கார்ட்டூன்

Thursday, January 20, 2011

குடியரசு தினம்


மது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட
விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.

சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி
வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம் என்பதை
உணரமுடிகிறது. மற்றபடி பலருக்கு- அதிலும் குறிப்பாய் பல இளைஞர்களுக்கு  குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை.

இன்றைய பள்ளிகளிலும் தேசப் பற்றை விட மதிப்பெண்கள் பற்றே அதிகம் மாணவர்களிடம் இருக்கிறது. மொழிப் பற்றும் தேசப் பற்றும் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வர யார் காரணம்? பள்ளியில் ஆசிரியர்களா? வீட்டில் பெற்றோர்களா? 

சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் காந்தி, நேருவிற்கு மேல் அவர்களால் சொல்ல முடிவதில்லை. தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜ், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்ரமண்ய சிவா, பாரதி, வீர வாஞ்சி, கொடி காத்த குமரன், நீலகண்ட பிரம்மசாரி........ 

இன்னும் எதனையோ வீரர்கள் சுதந்திரத்திற்காக் குரல் கொடுத்தவர்கள். இவர்களில்
பலர் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள். 

இந்தியா அளவில் பார்த்தால் திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, நேரு, பட்டேல், அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, லாலா லஜபதி, ஆச்சார்ய வினோபாபாவே, சித்தரஞ்சன் தாஸ், தாதாபாய் நௌரோஜி..... இன்னும் எத்தனையோ பேர் நாட்டு விடுதலைக்காகப் போராடி வாழ்ந்தனர். இவர்களை எவ்வளவு பேர் நினைவில் கொண்டிருக்கிறோம்? 

ஆசிரியர்கள் நாட்டுப் பற்றை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும். இந்த ஊட்டம்தான்
வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும்.
பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அன்றாட வாழ்க்கையை தொலைக்காட்சிகளிலேயே தொலைத்து விடுகிறவர்கள் எப்படி இளைஞர்களுக்கு வழிகாட்டுவது? 

வேரில் பழுதுகள் இருந்தால் விழுதுகள் வளர்வது எப்படி சாத்தியம்? நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான் ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும்.

முந்நூறு வருடங்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம்.. அந்த
முந்நூறு வருடங்கள் முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர்
ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்றே வாழ்ந்தார்கள்.

ராஜராஜ சோழன், மராட்டிய சிவாஜி, குப்தர்கள் போன்றவர்கள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தாலும் ஔரங்கசீப், அலாவுதின் கில்ஜி போன்றவர்களால் மக்கள் துன்பமும் பட்டார்கள். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவார்கள். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும் துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு.

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய தலைவனைத்
தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை
நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் (constitution). 

மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டம்தான் உலகிலேயே மிக நீளமானதாம். மன்னர் ஆட்சி ஆங்கிலேயர் ஆட்சி எல்லாம் முடிந்து 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத்தைப் போராடி வாங்கிவிட்டோம். சுதந்திரத்திற்குப் போராடிய பலரில் நேரு, அதன் பின் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1950இல் குடியரசு நாடாக அதாவது மக்களாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது.

சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின்
விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான
ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

இதையெல்லாம் இளைய தலைமுறை நன்கு அறிந்திருக்குமானால் நாட்டின் எதிர்காலம் வளமுடையதாக ஆகும் என்பது நிச்சயம். 

ஜெய்ஹிந்த்!

Saturday, January 8, 2011

காதலை எப்படி சொல்வது?


மனம் நிறைய காதல் இருந்தும் அதை எப்படிச் சொல்வதென்று புரியவில்லையா? `சொல்லத்தான் நினைக்கிறேன்... சொல்லாமல் தவிக்கிறேன்... காதல் சுகமானது' என்று நீங்களாகவே பாடிக் கொண்டிருக்காதீர்கள்.

இதோ இப்படிச் சொல்லிப் பாருங்களேன்...

காதலைச் சொல்லச் செல்லும் முன்பாக சிறிதாக ஒத்திகை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக உங்கள் காதலியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் காதலை சொல்லும் வேளையில் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர், இயல்பான குணத்தில் இருக்கும் சாதாரண வேளைதான் உங்கள் அன்பை காதலாக மாற்றும் தருணமாகும். எனவே அவர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலைச் சொல்லத் தொடங்குங்கள்.

காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். எந்தவித குணமுடைய பெண்ணாக இருந்தாலும் தனிமையில் சாந்தமாக இருப்பார்கள்.


நான் உங்களை காதலிக்கிறேன்' என்று நேரடியாக விஷயத்தை ஆரம்பிக்கக்கூடாது. எனக்கு உங்களைப் பிடிக்கும், உங்கள் சிரிப்பு பிடித்திருக்கிறது, பல சிந்தனைகளில் நமது கருத்து ஒத்துப்போகிறது, உங்களது உதவும் குணம், எல்லோர் மீதும் பாசமாக இருப்பது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்புகிறேன் என்று கூறி பிறகு `நான் உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்லலாம்.

கையில் பூவுடன் செல்லுங்கள். அவள் நிற்கும்போது நீங்கள் காலை மண்டியிட்டு நின்று அவளது முகம் பார்த்து கைகளை நீட்டி பூவைக் கொடுத்து `ஐ லவ் மை ஸ்வீட் பேபி' என்று சொல்லலாம். இப்படிச் சொல்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நாணம் மிகுந்த பெண், உள்ளார்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் பெண்களிடம் இந்த முறையில் காதலைச் சொல்லக்கூடாது. அவர்கள் திகைப்படைந்துவிடுவார்கள்.

வார்த்தைகளை `வளவள'வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக்கூடாது. பெண்கள் சாமர்த்தியசாலிகள். உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். இழுத்து இழுத்து பேசினால் விரும்ப மாட்டார்கள்.


எல்லாப் பெண்களுக்கும் பூக்களைப் பிடிக்கும். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு (பொக்கே) கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. `உன்னோடு மட்டுமே இனி என் வாழ்வு கழிவதை விரும்புகிறேன்' என்று உளமாறக் கூறுங்கள். அவருக்கும் உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது ராணுவ வீரன் போலவோ, இன்டர்விïவில் மேலதிகாரி முன்பு நிற்பதுபோலவோ விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயா னவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, `அன்பே உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்லுங்கள். சொல்லும்போது உங்கள் மனம் உருகி கண்கள் செருகினால் கூட தவறில்லை. முழுக்க அவருக்கு பாதுகாப்பு அளிப் பது போலவும், உங்கள் வாழ்வு முழுவதும் அவரை சார்ந்திருப்பதுபோலவும் உங்கள் பேச்சும், உடல் அசைவுகளும் இருக்க வேண்டும். அவரைச் சுற்றி வந்து பேசுவது அதிகப்படியான காதலைக் குறிக்கும். ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண் கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

புகழ்ச்சி எல்லோரையும் கவரக்கூடியதாகும். பெண்களுக்கு அவர்களின் அழகை வர்ணிப்பது மிகவும் பிடிக்கும்.

Tuesday, January 4, 2011

நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க கடிதம்


எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால்...

 அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்.

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும்; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ “தமிழீழம்” வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் நீ.

இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும்தான்.

அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள் ; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.

இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?
நீ எப்படி தலைவன் ஆனாய்?

சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!

அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.

அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!

எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும், தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!

எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.

ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை “மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.

ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!
அண்ணா, உன்னைப்போய் "தீவிரவாதி" என்று அழைக்கும் (உண்மையான) தமிழர்களுக்கு இக்கடிதம் சமர்பணம்...

உன் அன்பு தம்பி