Tuesday, September 30, 2014

நவராத்திரி கொலு டிப்ஸ்!


Celebration Tips for Navaratri dolls - Tips for Women
 உங்க வீட்ல கொழு வைக்கப் போறீங்களா... இதோ கோலாகலமான கொலுவுக்கு சில யோசனைகள்!
* உங்கள் பொம்மைகளுக்கு குறைந்த செலவில் உடனடி ஆபரணம் தயார் செய்ய வேண்டுமா?  3டி க்ளிட்டர்ஸ் கோல்டு கலர் வாங்கி, பொம்மைகளுக்கு கம்மல், நெக்லஸ், ஒட்டியாணம் என்று உங்கள் விருப்பப்படி அலங்கரியுங்கள். அலங்கரித்து முடித்ததும் 24 மணி நேரம் காயவைத்து எடுத்துவைக்க வேண்டும்.
* கொலுவில் மலை செட் வைக்கும்போது, சிறிய தகர டப்பாவைப் புதைத்து, அதிலிருந்து இன்ஸ்டன்ட் சாம்பிராணியை எரிய விட்டால், மலையில் பனிப்புகை வருவது போல அட்டகாசமாக இருக்கும். கொலு வைக்கும் இடமும் கமகமக்கும்.
* கொலுவுக்கு பொம்மை வாங்கியதும், மேலே வார்னிஷ் அடித்து விடுங்கள். தூசி படிந்தால்கூட தண்ணீ­ரில் நனைத்த துணியால் துடைக்கலாம். பொம்மைகளையும் பெயிண்ட் உரியாமல் பாதுகாக்கலாம்.
* அழகிய வடிவமுள்ள காலியான சென்ட் (அ) ஸ்பிரே பாட்டில்களின் மேல் பசை தடவி, சம்கி (அ) செயற்கை முத்து, பாசி ஒட்டி அலங்கரித்து, சிறிய பூங்கொத்துகளை செருகி கொலுப்படியின் இருபுறமும் வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.
* பழைய குக்கர் கேஸ்கட்டுகளை இரண்டாக வெட்டி. அதன் மேல் தங்க நிற பேப்பரை ஒட்டி, பார்க் மண்ணில் ஊன்றி வைத்து, அழகான, அலங்கார வளைவுகளை உருவாக்கலாம்.
* ஒரு தட்டையான, அகன்ற பாத்திரத்தில் தண்­ணீரை நிரப்பி, அதில் சின்ன பிளாஸ்டிக் வாத்து பொம்மைகளை மிதக்க விடுங்கள். கடையில் விற்கும் கலர் தெர்மாகோல் உருண்டைகளை வாங்கி, வாத்துகளுடன் கூடவே நீரில் போடுங்கள். நீரின் மேற்பரப்பில் ஜிகினாத் தூளையும் தூவி விடுங்கள்.  விளக்கு வெளிச்சத்திலும், பேன் காற்றின் அசைவிலும் உங்கள் செயற்கை குளம் ஜொலிக்கும்.
* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகை சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால் இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
* இடப்பற்றாக்குறை உள்ளவர்கள் சஞ்சலப்பட வேண்டாம். ஓரளவுக்கு உயரமான பலகையின் மேல் ஜரிகைப் புடவையை விரித்து, அதன் மேல் இரண்டு மரப்பாச்சி, துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் பொம்மைகளை வைத்து, தரையில் ஒரு பித்தளை தாம்பாளத்தில் கோலம் வரைந்து அதன் மேல் ஜவ்வரிசி ஒட்டி விடுங்கள். இரண்டு பக்கத்திலும் முத்துபோல் விளக்கெரிய விடுங்கள். சிம்பிளாக இருந்தாலும் தெய்வீகமாகக் காட்சிதரும் உங்கள் வீட்டு கொலு!
* மக்காச்சோள சீசன் இது. சோளப்பருப்புகளை எடுத்துவிட்ட பிறகு, அதில் பச்சைக்கலரை பூசி காயவைத்து பார்க், மலைப்பகுதியில் நட்டு வைத்தால் அசோகமரம் நிற்பதுபோல் அழகாகக் காட்சியளிக்கும்.
* வாசலில் நவராத்திரி தினத்தில் கோலம் போட்டு செம்மண் (காவி) இடுவது வழக்கம். சென்னை போன்ற பெரு நகரங்களில் காவிக்கு எங்கே போவது? கடன்வாங்கவும் மனது இடம் கொடுக்காது. நீங்களே இன்ஸ்டன்ட்டாக காவியைத் தயாரிக்கலாம். 50 கிராம் மஞ்சள்தூளில் காய்ந்த சுண்ணாம்புத் தூள் ஓர் ஸ்பூன் கலந்து வைத்துக் கொண்டால், வேண்டும்போது தேவையான அளவு எடுத்து தண்­ணீர் விட்டுக் குழைத்து வாசலில் செம்மண் பார்டர் போல இடலாம். மஞ்கள் வாசனை தூக்கலாக இருக்கும். பூச்சிகள் வராது. (இது கிருமிநாசினிகூட!) செக்கச் செவேர் என்று பளிச் சென்று இருக்கும். ஆரத்தி எடுக்கவும் இதையே பயன்படுத்தலாம்.
* பூஜை அறை செட்டில் படங்களுக்கும் பொம்மைகளுக்கும் பூ வைக்கவேண்டும் என்றால் கொண்டை ஊசியில் கோர்த்து வைத்தால் பூவும் கீழே விழாது, பார்க்கவும் அழகாக இருக்கும். காய்ந்ததும் சுலபமாக எடுக்கலாம்.
* கொலுவில் பார்க், ப்ளே கிரவுண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்றவைகளுக்கு வேலிகள் அமைக்க தீக்குச்சிகளை உபயோகப்படுத்தினால் அசத்தலாக இருக்கும்.
* பசுமையாக செடிகள், புல்தரை ஆகியவற்றை அமைக்க, தேங்காய்ப்பால் எடுத்த தேங்காய் சக்கையை பச்சைக் கலர் கலந்து காயவைத்து பயன்படுத்தலாம்.
* சிலர் வீட்டில் மலைகள் அமைத்து அதன் மீது கோபுரம், சுவாமி வைப்பது வழக்கம். மலை செய்யும்போதே, மண் ஈரமாக இருக்கும்போது விரலினால் 2 இன்ச் நீளத்திற்கு குழி செய்து காயவிடவும். இந்தக் குழிகளில் ஆங்காங்கே சாம்பிராணி வத்தி சொருகி வைத்து ஏற்றிவிட்டால், மலையிலிருந்து புகைவருவது போல தெய்வீகத் தோற்றம் தரும்.
* தெப்பக்குளம் கட்டி அதில் மீன், கப்பல், ஓடம் (போட்) மிதக்க விடுவார்கள் சிலர். தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீ­ரில் இங்க் அல்லது துணிக்கு போடும் நீலப்பவுடரை கொஞ்சம் கரைத்துவிட்டால், அசல் குளத்து தண்ணீ­ர் போல தோற்றம் அளிக்கும்.
* கொலுப்படிகளில் விக்கிரகங்கள் வைப்பது வழக்கம். இந்த விக்கிரகங்களை மண்ணெண்ணெய் தடவி, விபூதி போட்டு துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.
* கொலுவில் அமைக்கும் பார்க்கில், செடிகளைத் தொட்டியில் வைப்பது வழக்கம். கடுகு அல்லது கேழ்வரகை இரண்டு மணி நேரம் ஊறப்போட்டு தண்ணீ­ர் வடித்து, பிளாஸ்டிக் கிண்ணத்தில் மண் நிரப்பி மேலே இதனைத் தூவி விட்டு தண்­ணீர் தெளித்தால், சீக்கிரம் முளைத்து செடி போல இருக்கும். மற்ற தானியங்கள் முளைக்க தாமதம் ஆகும்.
* பெரிய சாக்லெட் டப்பாக்களில், சாக்லெட் குழிவான பிளாஸ்டிக் அட்டையில் பேக் செய்து வரும். அந்த பிளாஸ்டிக் அட்டையை எடுத்து, குழியில் தானியங்கள் வைத்து கடையில் விற்பனை ரேக்கு போல வைத்து அலங்கரிக்கலாம். பக்கத்தில் செட்டியார் பொம்மை ஒன்று வைத்து விட்டால், செட்டியார் கடை போல தோற்றம் அளிக்கும்.
* பார்க், ஏர்போர்ட், ரோடு போன்று அமைக்கும்போது உபயோகப்படுத்திய பழைய கொசுவத்தி மேட்களை தரையில் நீளவாட்டில் அமைத்தால் பிளாட்பாரம் போல் தெரியும். உலர்த்திய காபி பொடியை தார்ச் சாலை போல் (விமான ஓடுதளமாகவும்கூட) அமைத்து அழகுபடுத்தலாம்.
* வெற்றிலை-பாக்கு, மஞ்சள், குங்குமம், நாணயம் போன்றவைகளை சிறு கவரில் போட்டு வைத்துக்கொண்டால், கொலுவுக்கு வருபவர்களுக்கு சட்டென்று எடுத்துக் கொடுக்கலாம். அந்த நேரத்தில் ஒவ்வொன்றாகத் தேடி அலையும் டென்ஷனைத் தவிர்க்கலாம்.
* நவராத்திரியில் கொலுவின் கீழ் ரங்கோலி, நீர்மேல் கோலம், தண்ணீ­ருக்கு அடியில் கோலம் ஆகியவற்றைப் போட்டு வைத்து அழகுபடுத்தலாம்.

No comments:

Ad