Sunday, February 7, 2010

துலீப் டிராபி: மேற்கு மண்டலம் சாம்பியன்

யூசுப் பதான் இரட்டை சதம் அடிக்க, துலீப் டிராபி தொடரில் மேற்கு மண்டல அணி கோப்பை வென்றது. ஐதராபாத்தில் நடந்த பைனலில்,3 விக்கெட் வித்தியாசத்தில் தெற்கு மண்டல அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் 4 வது இன்னிங்சில் மிகப் பெரிய இலக்கை (536 ரன்) "சேஸ்' செய்ததன் மூலம், முதல் தர போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்தது மேற்கு மண்டலம். 

மேற்கு, தெற்கு மண்டல அணிகள் மோதும், துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் பைனல் ஐதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் தெற்கு மண்டலம் 400, மேற்கு மண்டலம் 251 ரன்கள் எடுத்தன. தெற்கு மண்டல அணி 2 வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின்னர் 536 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு, 2வது இன்னிங்சை துவக்கிய மேற்கு மண்டல அணி, 4 ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 379 ரன்கள் எடுத்திருந்தது. யூசுப் பதான் (84) அவுட்டாகாமல் இருந்தார். 

இரட்டை சதம்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யூசுப் பதான், சதம் கடந்தார். 7 வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் பினல் ஷா (16) அவுட்டானார். பின் ரமேஷ் பவாருடன் இணைந்து பொறுப்பாக ஆடிய யூசுப் பதான், அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து, இரட்டை சதம் கடந்தார். இவரது அதிரடி கைகொடுக்க, மேற்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்சில், 7 விக்கெட்டுக்கு 541 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. யூசுப் பதான் (210), பவார் (18) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் 16 வது முறையாக துலீப் டிராபியை வென்று சாதித்தது மேற்கு மண்டலம். 

தோல்விக்கு காரணம்: மேற்கு மண்டல அணிக்கு வெற்றி இலக்காக, தினேஷ் கார்த்திக்கின் தெற்கு மண்டல அணி 536 ரன்கள் நிர்ணயித்தது. இருப்பினும் அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம். குறிப்பாக, யூசுப் பதானுக்கு மட்டும் 6 முறை (15, 15, 95, 102, 126, 170) "கேட்ச்' வாய்ப்பை கோட்டை விட்டனர். 

உலக சாதனை: சர்வதேச அளவில் முதல்தர கிரிக்கெட்டில், எந்த அணியும் இதற்கு முன், நான்காவது இன்னிங்சில் 541 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது இல்லை. முதல் முறையாக கேப்டன் வாசிம் ஜாபரின் மேற்கு மண்டல அணி, இந்த சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1938-39, டர்பனில் தென் ஆப்ரிக்க அணியின், இலக்கை (696) விரட்டிய இங்கிலாந்து, 5 விக்கெட்டுக்கு 654 ரன்கள் எடுத்தது. 10 நாட்கள் நடந்த இந்த ஆட்டம் "டிரா' ஆனது. மும்பை அணி நிர்ணயித்த 959 ரன்களை (1948-49, புனே) "சேஸ்' செய்த மகாராஷ்டிரா அணி, 604 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
Blog Widget by LinkWithin