காலையில் சீக்கிரம் எழுந்து விடுகிறேன்
என்ன ஆச்சரியம் என்று
சந்தேகத்துடன் பார்க்கிறாள் என் அம்மா...
நான் பலமுறை தலை சீவுவதை
சந்தேகப்பட்டு பார்த்துவிட்டு செல்கிறார்
என் அப்பா...
என் ஆடை அழகேறியதில்
சந்தேகங்கள் ஊராருக்கு...
நான் எதை கிறுக்கினாலும்
கவிதை என்று சொல்லி விடுகிறார்கள்
நண்பர்கள் வட்டத்தில்...
இரவில் குரல் கொடுத்து
இன்னும் தூங்கவில்லையா என்கிறார் அம்மா
நான் தூங்குவதுபோல் நடிப்பது
தெரிந்துவிட்டது என்அம்மாவுக்கு...
அப்பா குரல் கொடுத்தும் கவனிக்காமல்
விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஏதோ அசரீரி அழைத்ததாய் நினைத்து...
எதிர்படுபவர்களை கவனிக்க மறந்து
அதற்காக பலகாரணங்கள்
சொல்ல வேண்டியிருக்கிறது...
இமைகளை மூடினாலும் எட்டிப்பார்க்கிறது
கண்களுக்குள் இருக்கும் கனவுகள்...
கவிதைவீதி
நடை, உடை, பாவனை மாறிவிட்டது
இருந்தும் மாறாதது போல்
நடிக்க வேண்டியிருக்கிறது...
இனி என்ன செய்ய...
எவ்வளவு மறைத்தும் மறைக்கமுடியவில்லை
எனக்குள் வந்துவிட்ட காதலை....
No comments:
Post a Comment