குழந்தை நட்சத்திரமாக உறவைக் காத்த கிளியில் ஆரம்பித்து சிம்புவின் திரையுலக வாழ்க்கை. நம் மக்களுக்கு குழந்தை நட்சத்திரங்கள் என்றாலே ஒருவித அன்பு பெருகி, கொண்டாடுவார்கள். கமலஹாசன் தொடங்கி, அஞ்சு, மாஸ்டர் கணேஷ், மாஸ்டர் மகேந்திரன், ஷாலினி, ஷாமிலி, என்று இன்றைய சாரா வரை நம் வீட்டுப் பிள்ளைகள் வளர்வது போல மகிழ்வார்கள். சிம்புவின் வளர்ச்சியும் அப்படித்தான் இருந்தது. 1984ல் உறவைக்காத்த கிளியில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேலாக சிம்புவை மக்கள் கவனிக்கத் தொடங்கி, ரசிக்கவும் தொடங்கியிருந்தார்கள். அதுவும் 1989ல் வெளியான சம்சார சங்கீதம் படத்தில் சிம்பு ஆடிய ‘ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்’ பாடலை அப்படி ரசித்தார்கள்.
அதன்பின் 2002ல் காதல் அழிவதில்லை படம் மூலமாக சிம்புவை, கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார் அவர் தந்தை டி.ராஜேந்தர். தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த டி.ராஜேந்தர், அடுத்த தலைமுறை மக்களின் ரசனை மாறலுக்கு ஈடு கொடுக்க முடியாமல், தன்னை நிரூபிக்க வேண்டி சிலம்பரசனை களத்தில் இறக்கிய படம் காதல் அழிவதில்லை. தாங்கள் ரசித்து வந்த ஒரு குழந்தை நட்சத்திரத்தின் முதல் படம் என்ற வகையிலான ஆவரேஜ் ஓபனிங் கிடைத்தது அந்தப் படத்திற்கு. ஆனால் அந்தப் படத்தின் இண்ட்ரோ பாடலில் (வெரலு...விசிலு..) ‘விஜய்னா ஃபைட் வரும், அஜித்னா துடிப்பு வரும், விக்ரம்னா நடிப்பு வரும்.. விவேக்னா காமெடி வரும்.. சிம்புன்னு சொன்னா புது ஸ்டைலே வரும்’ என்றதை ரசிக்கவில்லை மக்கள். ‘பெரிய ரஜினின்னு நெனைப்பு’ என்ற கமெண்ட்ஸ்களும், விரல் நடிகர் என்ற எள்ளல் பட்டமுமே கிடைத்தது. என்ன இருந்தாலும், மக்கள் ரஜினிக்கு கொடுத்த இடத்தை அவ்வளவு சுலபத்தில் விட்டுக் கொடுப்பதில்லை என்பதாக அது அமைந்ததோடு, ஒரு ஆரம்ப சறுக்கலாகவும் சிம்புவுக்கு அமைந்தது.
அதன்பின் வெளியான தம், அலை, கோவில் எல்லாமே தோல்விப்படங்களாகவே அமைய, ’குத்து’ மட்டும் ஆவரேஜாக கவனிக்கப்பட்டது. அதற்கடுத்து யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஹிட் ஆகிவிட, பெரிய எதிர்பார்ப்புடன் ரொமாண்டிக் த்ரில்லரான ”மன்மதன்” வெளியானது. சிம்புவின் கதையில் வெளியான இந்தப் படம் ஒரு ஹிட்.. அதன்பிறகு தொட்டி ஜெயா, சரவணா போன்ற கவனிக்கப்படாத படங்களுக்குப் பிறகு, மீண்டும் சிம்புவே கதை எழுதி, சிம்புவின் இயக்கத்திலேயே வல்லவன் வெளியாகிறது. இதிலும் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் கைகொடுக்க, ஓரளவு தப்பிக்கிறது படம். ஆனாலும் சிம்பு, மக்கள் மனதில் நெருக்கமானவாராக இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியிருந்தது.. காரணம் அவர் சர்ச்சைகளின் நாயகனாக இருந்ததால்.
ஆம்.. காரணம் அப்பாவின் இயக்கத்திலேயே நடித்துக் கொண்டிருந்த சிம்பு, இயக்குநர்களுக்கு கட்டுப்பட்ட நடிகரல்ல என்பது சினிமாத்துறையின் ஊரறிந்த ரகசியமாக பேசப்பட்டு வந்தது. அதற்குத் தகுந்தாற்போலவே, மன்மதன் படத்தின் இயக்குநர் முருகன் சிம்புவின் இடையூறுகளால் வெறுப்படைந்த சம்பவங்களெல்லாம் நடந்தன. இது, இதுநம்ம ஆளு பாண்டிராஜ் வரை தொடர்கிற ஒன்றாக இருக்கிறது.சக நடிகர் நடிகைகளுடனும் இவருக்கு நல்ல நட்பு இருக்கவில்லை. தனுஷுக்கும் இவருக்கும் இருக்கும் பனிப்போர் பரவலாகப் பேசப்பட்டதும், தனுஷின் கொலவெறி பாடல் வெளியான உடனேயே, சிம்பு Love Anthem வெளியிட்டதும் நடந்தது. அதைப் போலவே நயன்தாரா உடனான ப்ரேக் அப்பிற்குப் பிறகு இருவரும் நெருக்கமாக இணைந்திருக்கும் புகைப்படம், ஹன்சிகாவுடனான ப்ரேக் அப்பிற்குப் பிறகு அவருடன் இணைந்திருக்கும் புகைப்படம் வெளியானதும், வீடியோக்கள் வெளியாவதும், விஜய் டிவி நிகழ்ச்சியில் ப்ரித்விராஜுடன் சண்டையிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது என இவர் மீது துறையிலும், மக்களிடமும் இவர்மீதான கசப்புணர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, பீப் சாங் வெளியாக ‘அட.. என்னப்பா இது’ என்று வெறுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர் மக்கள். அப்போதும் ஒரு வருத்தமோ, மன்னிப்போ எதுவுமின்றி ’நான் என்ன வேணா பண்ணுவேன்’ ரேஞ்சுக்கு இவர் பேட்டி கொடுக்க பெரும்பாலானோர், இவர்மீது கோபத்திலேயே இருக்க நேர்ந்ததுஆனால், தோல்விகள் சர்ச்சைகள் இதையெல்லாம் மீறி, சிம்பு எப்போதும் லைம் லைட்டிலேயே இருப்பதற்கும், எப்போது வந்தாலும் அவருக்கு ஒரு ஓபனிங் இருப்பதற்கும் என்ன காரணம்? இனியாவது சிம்பு மக்களின் அன்பிற்கு உரியவராக வலம்வர என்ன செய்யலாம்? சுருக்கமாக அலசலாம்;
கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா. ‘நான் அவன்டா.. இவன்டா’ என்ற எந்த பந்தாவும் இல்லாமல் சிம்புவை ஒரு நடிகனாக நிலைநிறுத்திய படம். ‘ஷூட்டிங்ல இவர் பங்க்சுவல் இல்ல. ஆனா, நாம மிஸ் பண்ணக்கூடாத நல்ல ஆக்டர்’ என கௌதமால் பாராட்டப்பட்ட சிம்புவை மக்களும் அந்தப் படத்தில் கொண்டாடினார்கள். அந்தப் பட வெற்றிதான் வானம் படத்திலும் சிம்புவை ஓரளவு மக்களை ரசிக்க வைத்தது. ஆனால் திரும்ப ஒஸ்தியில் தன் பழைய ட்ராக்கில் பயணிக்கலானார் சிம்பு. போலவே தனுஷ் - சிம்புவுக்கு இடையான பனிப்போர் மறைந்து,தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்காமுட்டையில் கெஸ்ட் ரோலில் நடித்த சிம்புவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. போலவே டான்ஸ் ஆடும் திறமை. பீப் சாங்கிற்குக் கொடுத்த விளக்கத்தில் ’நான் மக்களுக்காக முட்டி தேய டான்ஸ் ஆடறேன்’ எனச் சொன்னது நகைப்புக்குள்ளானாலும், இவரது டான்ஸிற்கு என்று நல்ல ரசிகர்கள் உண்டு.
அதைப்போலவே, பாடகராகவும் சிம்புவுக்கு நல்ல பெயர்தான். ஈகோ இல்லாமல் ஜீவா, ஜெயம் ரவி என்று சக நடிகர்களுக்காக இவர் பாடுவது வரவேற்கத்தக்க ஒன்று. ஹீரோவுக்கான முழு லட்சணமும் பொருந்திய, குரல்வளம், மாடுலேஷன், டான்ஸ், நடிப்பு என அனைத்தும் ஒருங்கே பெற்ற நடிகர் சிம்பு என்பது பரவலான சினிமா ரசிகர்களின் கருத்து. ஆனால் இவர், எந்த இடையூறும் செய்யாமல் தன்னை முழுமையாக இயக்குநரை நம்பி ஒப்படைத்தாக வேண்டும். போலவே, இவரை கையாளத் தகுந்த ஒருவர் இவரை இயக்க வேண்டும். இரண்டும் ஒருங்கே நடந்தால், சிம்பு அமைதி காத்தால்.. இன்னும் பல வி தா வ-க்கள் வெளிவரலாம்.வரவேண்டும் என்பதே இந்தப் பிறந்தநாளில் அவரது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு.
'ஸ்டைலிஷ் பாடி லேங்க்வேஜ்’
‘ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்'
'அவரு ஹீரோயின்ட்ட லவ் சொல்றப்ப, கண்ல உண்மையான லவ் தெரியும். லவ்வபிள் இடியட்!’
‘டான்ஸ்’
‘பன்முகத் திறமை. டைரக்ஷன்.. நடிப்பு, பாட்டுன்னு எல்லாத்துலயும் எறங்கி அடிப்பாரு’
’வாயை மட்டும் கொறச்சுட்டா, சிம்பு என்னைக்கோ டாப்ல வந்திருக்க வேண்டிய ஆளு’
’என்ன இல்லை அவர்கிட்ட? கம்ப்ளீட் ஆர்ட்டிஸ்ட்ங்க சிம்பு!”
“ஃபீல்ட்ல எத்தனையோ ஹீரோ இருந்தும் உங்களுக்கு ஏன் சிம்புவ பிடிச்சிருக்கு?” என நாம் கேட்டதற்கு சிலரின் பதில்கள்தான் மேலே..
இப்பொழுதும் ‘இது நம்ம ஆளு’ என உங்களை அரவணைத்துக் கொள்ள ரசிகர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் ப்ரோ!
ஹேப்பி பர்த்டே டு யூ கார்த்திக்... ஸாரி.. சிம்பு!
-பரிசல்கிருஷ்ணா
No comments:
Post a Comment