Sunday, January 10, 2010

விஜயகாந்த் - கிழக்கின் புத்தகம்

விஜயகாந்த் - சினிமா கலைஞர், புரட்சி கலைஞரான வரலாறு

பெரும்பாலும் ரஜினிக்கு பிறகு இருந்து அஜித், விஜய் நடிக்க வரும்வரை இருந்த காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின் பிடித்தமான ஹீரோ விஜயகாந்தாக தான் இருப்பார். அதுவும் என்னைப் போன்று தென்மாவட்டத்துக் காரர்களை கேக்கவா வேணும்....

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் பிடிக்காத தீவிரவாதிகளே கிடையாது, படத்தில்.. அது மட்டுமல்லாது தமிழில் குடும்பத்துடன் பார்க்கும் சில நடிகர்களின் திரைப்படங்களில் இவரது படங்களும் உண்டு. ஆக்‌ஷன் படம் வேறு. குழந்தைகளுக்கு ஒரே குதூகலம் தான் போங்க. அப்படி விஜயகாந்தை ஒரு நடிகனா பார்க்காமல் நாட்டை காப்பாற்றும் ஒருவராக பார்த்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்று அது முடியவில்லை... ஏனோ ?!


சரி. இந்த புத்தகத்துல யுவகிருஷ்ணா என்ன சொல்லியிருப்பார்னு பாக்கலாம்னு, கிழக்கு பிரசன்னாவுக்கு மெயில் அனுப்பி புத்தகத்தை வாங்கினேன்.  பலருக்கு பிடிக்காத ஒருவர் (விஜயகாந்த் தான்)  பற்றி படிக்கும் அலுப்பே தெரியாதவாறு இருந்தது புத்தகத்தின் நடை. அவ்வளவு எளிமை, ஆங்காங்கே காமெடி டிராக்குகள், சினிமா பாடல்களின் ஹம்மிங்குகள் வேறு...

ஆசிரியர் பற்றி: எதையும் எளிமையாக சொல்லும் யுவகிருஷ்ணாவின் அழகே இந்த புத்தகத்தின் புதுமை, பெருமை. படிக்ககூட சோம்பேரி படும் ஆட்களையும் கவரும் ஆற்றல் கொண்டது, இப்புத்தகம். போதும்னு நெனக்கிறேன்... உபரி தகவல் ஆசிரியர் ஒரு திமுக காரர். அந்த வாடை ஒரு இடத்தில் கூட இல்லை. ஒரிஜினல் தேமுதிக காரன் கூட இவ்வளவு ரசிக்க மாட்டான். ஆனால் விஜயகாந்த தலைவர் பிரபாகரனோடு ஒப்பிடும் இடங்கள் தான் இடிக்கிறது, தவிர்த்திருக்கலாம்....

புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்:  

விஜயராஜ் (இயற்பெயராம்) மதுரையில் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதியின் மூன்றாம் குழந்தையாக பிறந்தவர். இளம் வயதில் முட்டு சந்து நாடார் கடைல பல்பம் வாங்கி திண்பது, தீப்பெட்டி சீட்டு, கோலி, கில்லி ஆடுவது இவரின் வாடிக்கை. நம்மைப்போல இருக்கார்ல. மதுரை தாவணிகளை கவருவதற்காக கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டுவது பிடித்தமானது... ஆனாலும் அண்ணன் ஒரு பூந்தோட்ட காவல்காரன்.

காதல் மன்னன் ஆனது எப்படி ?


ப்படி புயலாய் போய்ட்டு இருந்தவர் வாழ்வில் இந்தி போராட்டம் வந்துள்ளது., அதனால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ரைஸ்மில்லை பார்க்க போய்ட்டார். அங்கதான் அந்த மேட்டர் நடந்துருக்கு... இது இன்ன வரைக்கும் யாருக்கும் தெரியல...

தலைவர் மில்லு பக்கத்துல இருக்குற ஒரு டீ க்கடைல நின்னு தம் பத்த வைக்கிறது வழக்கம். அந்த ஸ்டைல பாத்து எதிர் வீட்டி ஜன்னல் ஒண்ணு (கண்கள் இரண்டால்  ’ஸ்வாதி’ மாதிரின்னு வச்சுக்குங்களேன்) பிக்கப் ஆயிடுச்சு. அதுக்காக எப்பயும் நம்பியார் மாதிரி இருக்கும் அண்ணன் பூப்போட்ட சட்டை & பெல்ஸ் பேண்டு கணக்கா மில்லுக்கு வரப்போக மாறிட்டார். இங்க தான் கதைல ஒரு டுவிஸ்டே..! பாவம் திடீர்னு ஒரு நாள் எதிர்வீட்டு ஜன்னல் திறக்கவே இல்லை. விசாரிச்சு பார்த்தா அது லீவுக்கு வந்த குயிலாம். அதான் பறந்து போயிடுச்சு. அண்ணன் தான் பாவம் மனசு உடைஞ்சு போயிட்டாராம். இது மாதிரி அவர் வாழ்க்கைல இன்னும் 2 காதல்களும் வந்து போயிருக்கு..!?

சினிமாவில் நுழைந்தது எப்படி ?


மதுரைல சேனாஸ் சினிமா கம்பெனி  வச்சிருந்த மர்சூக் & எம்.ஏ.காஜா, இந்த 2 பேரும் தான் கேப்டனின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டவர்கள். பின்பு எஸ்.ஏ சந்திரசேகர் இவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். அதனால் தான் இன்னமும் தான் அர்ச்சனை செய்யும் போது சந்திரசேகர் பெயருக்கும் சேர்த்தே அர்ச்சனை செய்து வருகிறார். இன்னொருவர் இவரது நண்பர் அ.செ. இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர்களாக உள்ளனர். அதனால் தான் வேறு மொழிப்படங்களை ஒத்துக்கொள்ளாதவர் இவருக்காக ’மே டே’ என்ற ஆங்கிலப்படத்திற்கு பூஜை போட்டார்., அதுவும் வெளிவரவில்லையாம்.

தமிழ் சினிமாவின் முதல் 3-டி படமான அன்னைபூமி யின் ஹீரோ சாத்சாத் விஜயகாந்தே.! 1984-ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். அதில் சில... சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் மற்றும் ஆபாவாணன் இயக்கிய உரிமைக்குரல். என நடிப்பில் பல பரிணாமங்களை காட்டிய ஆண்டு அது. அந்த ஆண்டே கலைஞர் கையால் ஷீல்டு வாங்கினார்., அன்றிலிருந்து கலைப்புலி தாணுவால் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டார். அதுவே இன்று உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் அறியப்படுகிறது...

எம்.ஜி.ஆரும் கறுப்பு எம்.ஜி.ஆரும்



விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். ஆனால் அவரால் எம்.ஜி.ஆர் கூட சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனோ?? திமுக பக்கம் ஓவரா சாய்ந்ததாலோ என்னவோ?  தெரியல..

ஆனால் வி.என்.ஜான்கி அம்மையாரோடு நல்லா பழகியவர் கேப்டன். தன் பிறந்த நாளுக்கு வருஷா வர்ஷம் 50ஆயிரம் ரூபாய் ராமாவரம் காது கேளாதோர் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்து வர்றார். அந்த மதிப்பின் காரணமா தான் எம்.ஜி.ஆர். பயன்படுதிய பிரச்சார வேனை அன்பளிப்பா கொடுத்தாங்கலாம்.

இது மட்டும் இல்லீங்க... வாரம் 300 பேருக்கு ஞாயிற்றுகிழமை அன்னிக்கு  அன்னதானம், வருஷா வருஷம் இலவசமா ஏழைகளுக்கு திருமணம், கார்கில்லுக்கு 5 இலட்சம்., ஒரிசாவுக்கு 2 இலட்சம்., குஜராத் பூகம்ப நிதிக்கு 2 இலட்சம்., ஆந்திரா புயலுக்கு 2 இலட்சம்., சுனாமி நிவாரணமா தமிழ்நாட்டுக்கு 11 இலட்சம், பாண்டிசேரிக்கு 2 இலட்சம்., கும்பகோணத்துல உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா 1 இலட்சம்., இப்ப கூட இலங்கைக்கு 6 இலட்சம்னு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் கேப்டன் விஜயகாந்தோடது...

அதனால தான் அவரை கறுப்பு எம்.ஜி.ஆர்-னு தேமுதிக காரங்க கூப்பிடுறாங்க., நாமளும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்., அதுல ஒண்ணும் தப்பில்ல. தமிழ்நாட்டுல சம்பாதிச்சு வேற மாநிலத்துல் சொத்து வாங்கி குமிக்கிறவங்க மத்தில தமிழனுக்காக மட்டுமில்லாம மத்தவங்களுக்காகவும் இறக்கப்படுற நம்ம கேப்டன் எவ்வளவோ பரவாயில்ல...

கேப்டனும் பிரபாகரனும்


விஜயகாந்தும் தலைவர் பிரபாகரன் மீது பற்று கொண்டவரே. அதனால தான் ஈழத்தமிழர்கள் இன்னல் தீரும்வரை  தான் பிறந்த நாளே கொண்டாட போவதில்லை என்று கூறியவர். மேலும் 60 பேர் தாயகம் திரும்ப பல உதவிகளை செய்தவர்.

பலர் எதிர்த்த போதும் தன்னுடைய 100வது படத்துக்கு ’கேப்டன் பிரபாகரன்’ என்று பெயரிட்டவர். தன்னுடைய மகனுக்கும் கூட அப்பெயரே வைத்தார். இப்படி இருந்தவர் டெல்லி சென்று திரும்பிய பின் பேச்சு மூச்சே இல்லாமல் போய்விட்டார்.. என்னுடைய வருத்தமும் அது தான். அவரும் சேர்ந்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தால் இன்னும் அடிவாங்கியிருக்கும் காங்கிரஸ்...

[கலைஞர் மாதிரி இன்னவரைக்கும் தலைவர் பிரபாகரன பிடிக்காமலேயே அவர பிடிச்ச மாதிரி நடிக்கிறாரோ என்னவோ?]


அதிரடி இமேஜ்



விஜயகாந்த் - தேமுதிக வின் தலைவர் ஆனார் செப்டம்பர் 24, 2005 இல். அன்று முதல் ஓயாத உழைப்பு., அரசியல் இடையில் சினிமா (சூட்டிங்) என்று சுழன்று கொண்டே இருக்கிறார். இடையில் எத்தனை சாதனைகள், சறுக்கல்கள்.. அவரது வாழ்க்கை போன்றே. எதற்கும் அஞ்சாதவர் அவர். முதல் தேர்தலிலேயே 8.2 % பெற்று 43 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பாதித்தார்.

மதுரை இடைத்தேர்தலில் 20% வாக்குகள் பெற்று அதிமுகவிற்கே சவால் விட்டார். ஆனால் திருமங்கலம், 2009 பாராளுமன்ற தேர்தல்கள் விஜயகாந்த நினைத்தது போல அமையவில்லை. அதனால் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். பாவம் அவர் என்ன செய்வார் பணம் பாதாளம்வரை பாயும்போது எங்கேபோய் மோதிக்கொள்ளும் போது ?!

 திமுக., அதிமுக தவிர்த்து மூன்றாவது  சக்தி என்ற ஒன்று  உருவாகாமல் போனதற்கு கட்சிகள் தான் காரணமே தவி, மக்கள் ஒன்றும் காரணம் அல்ல. தனித்தன்மையோடு தனித்து நின்று ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று சொல்ல கூடிய தைரியமும், பொறுமையும் எந்தக்கட்சிக்கும் இல்லாமல் போனதனலாயே மூன்றாவது சக்தி உருவாகமிடியவில்லை. - என்ற ஆசிரியரின் வரிகள் கூர்மையானவை. (பாக்கப்போனா நடக்குறத பார்த்தா, இந்த வரிகள் பொய்ச்சு போயிடுமோனு பயமா இருக்கு)


இப்புத்தகம் விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கையை முழுமையாக கவர் செய்யவில்லை. எந்த ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகமும் அவர்களின் சுயசரிதையாக இருந்தால் மட்டுமே அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஆதலால் இந்த புத்தகம் நிச்சயமாக வாசகர்கள் அனைவரின் அலமாரியிலும் இருக்க வேண்டிய வருங்கால முதல்வரின் வாழ்க்கை குறிப்பு... 


புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கு செல்லவும்: விஜயகாந்த்

ஆசிரியர்: யுவகிருஷ்ணா

பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

விலை: ரூ.70


2 comments:

யுவகிருஷ்ணா said...

நன்றி! :-)

Oceanhooks said...

thank you very much!!
Captain is nice person!!

Ad