அன்றெல்லாம் அப்பாவின் கைபிடித்தே சென்று
உலகம் பார்த்த வியப்பு..
அப்பா.. நடக்கும் தெருவெல்லாம்
வாழ்வின் பாடங்களை கற்பிப்பார்..
வானத்தின் மேகப் பூக்களை கூட
யானையாகவும் குதிரையாகவும்
பார்க்க சொல்லி வளர்த்த அப்பாக்கள் எப்படியோ
மறந்தே போகிறது – பிள்ளைகளுக்கு(?)!!
மீன் வாங்கினால்
பூ வாங்கினால்
தெருவில் பழம் விற்கும் மூதாட்டியிடம்
பழம் வாங்கினால் கூட
அவர் பாவமென்று கொடுத்த அதிக பணத்திலிருந்து தானே
ஏழைக்கான கரிசனம் எனக்கே பிறந்திருக்கும்(?)!!
அவர் மார்பில்படுத்து உறங்கிப் போன நாட்கள்,
அவர் காலழுத்திவிட்டு
கால்மாட்டில் தூங்கிப் போன நாட்கள்,
சிலவேளை -
அப்பா பாவமென்று உறங்காமலே அழுத்திக் கொண்டிருக்க
நடுஜாமத்தில் எழுந்த அப்பா
‘ஐயா…’ என்னய்யா இது படுக்கலையா’ என்று தன்னை
நெஞ்சுறுக அழைத்து அணைத்துக் கொண்ட நாட்களெல்லாம்
கோடான கோடி விருதுகளை
அப்பா யெனும் ஒரு வார்த்தையில்
புதைத்துத் தானே கொள்கிறது(?)!!
‘ழா‘ எழுது
அரிச்சுவடி படி
ஆத்திச்சூடி தெரிந்து கொள்
வாய்ப்பாடு சொல்
திருக்குறள் ஒப்பி என்றெல்லாம்
அவர் வளர்த்த தமிழில் அவைகளை கடந்து
என்றுமே பெருமைக்குரிய சொல்
அம்மாவோடு சேர்த்து அப்பா.. அப்பா மட்டும்.. தானே(?)!!
எங்கு தன் பிள்ளைகள் எதற்கேனும் ஏங்கி
பிறர் வீட்டில் போய் நிற்குமோ,
ஊரார் பார்த்துவிட்டால் -
தன் பிள்ளைகளுக்கு கண்பட்டுவிடுமோ’ என்றெல்லாம்
தின்பண்டங்களை கூட தன் வேட்டியிலோ
வேறு துணி போட்டு மூடியோ -
மறைத்து மறைத்து வாங்கிவந்த அப்பா எனும் வரம்
எப்படித்தான் ‘கடைசி வரை இல்லாமலே போகிறதோ(?)!!
தமிழை திருத்தமாக படி
தமிழை திருத்தமாக பேசு
ஆங்கிலம் அவசியமெனில் கற்றுகொள்
பிறமொழி பேசும் திறனை வளர்த்துக் கொள்
அதற்காக மம்மி டாடி என்றழைக்காதே..
காலையில் எழுந்து விடு
உழைக்க பழகிக் கொள்
பொய் சொல்லாதே
பயம் தோல்வியை தரும்
நியாயத்தை தட்டி கேள்
அவசியத்திற்கு கோபம் கொள்
அசிங்கமாக பேசாதே
பிறர் இகழ நடக்காதே
ஒருபோதும் பிறரை ஏமாற்றாதே
நீ பெரிய ஆளாக வருவாய்……….. ‘என்றெல்லாம்
நம்பிக்கையையும் -
போதனைகளையும் கொடுத்த அப்பா…
வாழ்வெல்லாம் எனை
எனக்காய் தலைமேல் சுமந்த
குருவிற்கு ஒருபடி மேலன்றி வேறென்ன(?)!!
அப்பாவிடம் புத்தகம் கேட்பேன்,
‘என்ன புத்தகம்பா..?’
‘சோசியல் சைன்ஸ்பா’
‘அப்படின்னா என்னப்பா?’
‘சமுக அறிவியல்பா’
‘அப்படியா????!!!!!!!!!!’
‘அப்பா ஜாமின்ரி பாக்ஸ் வேணும்பா’
“அப்படின்னா என்னப்பா???”
‘பேனா பென்சிலெல்லாம் வைப்போமே அதுப்பா’
‘ஹாங்.. டப்பாவா ???”
‘டப்பா இல்லப்பா அதுல வேற காம்பஸ், ஸ்கேல், எல்லாம் இருக்கும்பா”
‘அதலாம் எனக்கு தெரியாதுப்பா
படிக்க உயிரு வேணுமா எடுத்துக்கோப்பா – ஆனா நல்லா படிப்பா
அது போதுமப்பா’ என்று சொன்ன அப்பாக்கள் -
அந்த ஜாமின்ரி பாக்ஸ் தொலைந்தாலும்
புத்தகம் கிழிந்தாலும்
அதன் நினைவாகவும் படிப்பாகவும்
நம் பெயருக்கு – முன்னும் – பின்னும்
இருந்துக் கொண்டே இருக்கிறார்கள்!!
- Thanks: Vidya Sagar
No comments:
Post a Comment