Wednesday, December 1, 2010

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்.!


காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம்.
கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல்,  

ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது.

காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல், இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும் திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத ஓர் இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால், உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத் தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க வைத்துக் கொள்வது தான். 


திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது. 

இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் 'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள். 

முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியாது விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா? அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும் சந்திக்கக்கூடியவை அவை. 


 உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம். ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில் மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவை சகித்துக் கொள்ள முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.

வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும் உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது. சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும் அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல் உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.

இந்த படத்த பாருங்க... புரியும்...!!!

 

ஓட்டு போடுங்க. நாலு பேருக்கு நல்லது செய்யுங்க..!

No comments:

Ad