Tuesday, December 28, 2010

சச்சின் ஒரு சகாப்தம் - என் தேசம்! என் சச்சின்!!


சமர்பணம்: இன்று ”சொற்ப ரன்னில் அவுட் ஆகிய சச்சின்” என போடும் பத்திரிக்கைகளுக்கும், அவரை திட்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும்..!


தனது 16வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கள் டெஸ்ட் வரிசையில் டொன் பிராட்மனுக்கு இரண்டாவது. ஒரு தினப் போட்டியில் விவியன் ரிச்சர்டுக்கு இரண்டாவது. கிரிக்கட் பஞ்சாங்கமான 'விஸ்டன்' ஆருடம் கணித்தது. ஆனால் சாதனைகள் என்று வரும்போது அவர்தான் இன்று 'நம்பர் ஒன்' - இதைச் சொல்ல எந்த விஸ்டனும் தேவையில்லை.

இந்தியாவில் கிரிக்கட் மதம் என்றால் சச்சின் அதன் கடவுள் என பாரி ரிச்சர்டு சொன்னார். இப்போது 439 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ள பள்ளி மாணவன் சர்ப்ஃராஸ் கானும் அதைத்தான் சொல்கிறார்.

டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு தினப் போட்டிகளிலும் 17,000க்கு மேற்பட்ட ரன்கள். முதல்தர ஆட்டத்தில் ஏறக்குறைய சுமார் 25,000 ஓட்டங்கள்.

டெஸ்ட் போட்டிகளில் 50 சதங்கள், 59 அரைச் சதங்கள். ஒரு தினப் போட்டியில் 46 சதங்கள். சுமார் 96 அரைச் சதங்கள். அதிக பட்ச ஸ்கோர் டெஸ்டில் ஆட்டமிழக்காது 248. ஒரு தினப் போட்டியில் ஆட்டமிழக்காது 200. அதிகமான ஆட்ட மற்றும் தொடர் நாயகன் விருதுகள்.

டெஸ்டில் அதிக சதங்கள் என்று வந்த போது கவாஸ்கர். டெஸ்டில் அதிக ரன்கள் என்று வந்த போது பிராயன் லாரா. அதிக அரைச் சதங்கள் என்று வந்த போது அலன் பார்டர் ஆகியோரது சாதனைகள் தகர்ந்தன. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் பத்துச் சதங்கள் என்பது எழுபது ஆண்டுகள் நிலை நின்றிருந்த Jack Hobbs ஐயையே முறியடித்த சாதனை.

பொது வாழ்க்கையில் பத்மசிறி, பத்மவிபூஷன், விளையாட்டில் உயர்வகை விருதான அர்ஜூனா, ராஜிவ் காந்தி கேல் ரத்தின இவர் கையடக்கியவை. இனி 'பாரத ரத்னா' தான் பாக்கி. அது விரைவில் வீடு வந்து சேரும் என்பது அவரது
ரசிகர்களின் நம்பிக்கை. 'விஸ்டன்' ஓராண்டு இவரை அந்த ஆண்டில் சிறந்த கிரிக்கட் வீரர் என அறிவித்தது.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுண் ஒருபடி மேலே போய், சம்பிரதாயங்களைப் பற்றிக் கவலைப்படாது பிரித்தானியாவின் உயர் விருதான 'சேர்' பட்டம் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தார். அமெரிக்க 'டைம்' சஞ்சிகை, 'அவர் தேர்ந்தெடுத்த துறையில் இன்று உயிர் வாழும் மிக உன்னதமான பிறவி' என வர்ணித்தது.

'லிட்டில் மாஸ்டர், லிட்டில் சம்பியன், மாஸ்டர் ப்ளாஸ்டர், டெண்டியா என்பவை இவரது நண்பர்களும், அபிமானிகளும் இவருக்கு வைத்துள்ள செல்லப் பெயர்கள்.
மராத்திய எழுத்தாளர் ரமேஷ் டெண்டுல்கர் தன் செல்லப் பிள்ளைக்கு சூட்டிய பெயர் தன் அபிமானத்துக்குரிய இசைக் கலைஞரான சச்சிவ் தேவ் பர்மனுடைய பெயர்.
வேகப் பந்து வீச்சில் பயிற்சி பெற டென்னிஸ் வில்லியை இவர் அணுக, 'தம்பி

இதற்கு நீ சரிவர மாட்டாய் - வேறு வேலை இருந்தால் பார்' என்று திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் இவருடைய துரோணாச்சாரியார் ராம்காந்த் அச்ரேகர் இவர் உள்ளில் உறையும் அர்ஜூனனை அடையாளம் கண்டு கொண்டார்.

1988ஆம் ஆண்டில் இவர் தனது பள்ளிக்காக ஆடிய எல்லாப் போட்டிகளிலும் சதம் பெற்றதோடு, வினோத் கம்பளியுடன் இணைந்து 664 ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார். அதில் சச்சினின் பங்கு மாத்திரம் 326 ரன்கள். 2006ஆம் ஆண்டுவரை ஹைதராபாத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முறியடிக்கும் வரை அது உலக சாதனையாக இருந்தது.

இவரது 14வது வயதில் கவாஸ்கர் தனது மெல்லிய கால் காப்புக்களை இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அது நடந்து இருபது ஆண்டுகள் கழித்து அதே கவாஸ்கருடைய 34 சதங்கள் என்ற சாதனையை முறியடித்தார். 

15வது வயதில் குஜராத்துக்கு எதிராக மும்பைக்காக ஆடிய கன்னி ஆட்டத்தில் சதமடித்தார். அதன் மூலம் முதல் தர ஆட்டத்தில் இத்தகைய சாதனை புரிந்த இளைய ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார். ரஞ்சி, தியோதர், துலிப் மற்றும் ஈரானி ஆகிய அத்தனை விருதுகள் போட்டியிலும் சதம் பெற்றவர் சச்சின். இந்த விடயத்தில் வேறு யாரும் இவரருகில் கூட வரமுடியாது.

1998இல் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மும்பையில் ஆடிய போது பிரேபோன் மைதானத்தில் இவர் பெற்ற இரட்டைச் சதம் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அது எளிதான காரியம் அல்ல.

இங்கிலாந்தில் யோர்க்ஷயர் அணி வெளிநாட்டவர் எவரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரே நபர் சச்சின் தான். அந்த சீசனில் அவர் 16 போட்டிகளில் 1070 ரன்கள் எடுத்தார். சராசரி 46.52

1989இல் தனது 15வது வயதில் கராச்சியில் பாக்கிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் பிரவேசம். இந்த டெஸ்டில்தான் வேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுசும் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு போட்டியில் அப்துல் காதருக்கு எதிராக ஓர் ஓவரில் சச்சின் 28 ரன்கள் எடுத்ததை மறக்க முடியாது என்கிறார் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த்.

1990இல் இங்கிலாந்தில் தான் இவரது கன்னிச் சதம் வந்தது. 91 - 92இல் சச்சினின் ஆட்டத்தைப் பார்த்த மெர்வ் ஹியூஸ் அலன் பார்டரிடம் 'பார், இந்தப் பொடியன் உன் சாதனையை முறியடிக்கப் போகிறான்' என்றார். அது நடந்தது.

கிரிக்கெட்டில் அவர் சாதனை படைக்க முடியாமல் போனது ஒரே ஒரு விடயத்தில்தான். இரண்டு முறை கப்டனாக இருந்தும் அந்தப் பதவியில் அவர் சோபிக்கவில்லை.

வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் சச்சின் போன்ற ஆட்டக்காரரைச் சந்திக்க முடியும் என்றார் வாசிம் அக்ரம். 99.9 வீதம் பரிபூரண ஆட்டக்காரர் சச்சின் என்றார் விவியன் ரிச்சர்ட். சச்சினை ஒரு ஜீனியஸ் என்றார் சேர் ரிச்சர்ட் ஹாட்லீ. இப்படி பல்வேறு சொற் தொடர்களால் அலன் பார்டர், பிரையன் லாரா ஆகியோர் புகழ்ந்திருக்கிறார்கள்.


சச்சினை மகிமைப்படுத்தும் இன்னொரு விடயம் சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர்கள் என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் இல்லை.

சச்சினுக்குப் பிறகு அதிக ரன்களைப் பெற்றுள்ள சனத் ஜயசூரிய 4,000 ரன்கள் பின்னால் நிற்கிறார். அவரது ஆட்ட நாட்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டன. சதங்களில் அவரைத் தொடக்கூடியவர் எனக் நம்பப்பட்ட ரிக்கி போண்டிங்கும் அப்படியே. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைப் பெற்ற சாதனையிலும் அவரை மிஞ்ச எவரும் இருப்பது போல் தோன்றவில்லை.

விளம்பர வருவாயில் மாத்திரம் ஒருவர் அவரை மிஞ்சியிருக்கிறார். அவர் தோனி. மற்றும்படி வேறு எந்தச் சாதனையிலும் சச்சினை மிஞ்ச எந்தக் கொம்பனும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

அவருடைய சமூகப் பிரஞ்சைக்கும், மனித நேயத்துக்கும் ஒரு சான்று. அவரது மாமியார் நடத்தி வரும் 'அப்னாலயா' மூலம் அவர் 200 குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார்.

சென்னையில் ஓர் ஆட்டத்தில் அவர் சதம் பெற்றார். ஆனால் இந்தியா தோற்றுப் போய்விட்டது. சச்சின் தலைகுனிந்த வண்ணம் பஸ் ஏறப் போகிறார். அவரது சகா அவரை ஆதரவாக அணைத்தபடி வழி நடத்தி வருகிறார். உற்றுப் பார்த்த போது சச்சினின் கண்களில் கண்ணீர்.

இந்த ஆட்டத்துக்கு முதல் ஆட்டத்திலும் 175 ரன்கள். 17,000 ரன்கள் என்ற மந்திர இலக்கைக் கடந்த அற்புத சாதனை. ஆட்ட நாயகன் என்ற விருது. என்றாலும் சச்சினின் கண்களில் நீர்க்கோப்பு. தொண்டை கம்மி இருந்தது.

தனக்கு இத்தனை புகழ் வந்தென்ன - இந்தியா தோற்றுப் போய்விட்டதே என்கிற சோகம்.

இந்த சோகத்தால் அவரது தலை குனிந்தது. ஆனால் அவரது அப்பழுக்கற்ற தேச் பக்தியை எண்ணி, அவரது சாதனைகளை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமையுடன் தலை நிமிர்ந்தான்

என் தேசம்! என் சச்சின்!!


3 comments:

Felix Raj said...

thanks very much to tell about my real hero

Gokulakrishnan said...

லட்சக்கணக்கான மக்களைக் கொல்ல போர்க்கருவிகளையும் கொடுத்து மற்றும் தனது செயற்கைக்கோள் மூலம் காட்டியும் கொடுத்துவிட்டு கூடவே தனது கிரிகெட்டு அணியையும் அனுப்பி விளையாட வைக்க இந்தியாவால் தான் முடியும்...........இப்படிப்பட்ட சூழ்நிலையில் விளையாட இந்திய கிரிகெட்டு அணிக்கும் எந்த கூச்சமும் கிடையாது............
தன் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கே நடைபெறும் கிரிகெட்டு விளையாட்டைப் பார்க்க இங்கிருக்கும் சுரணையற்ற தமிழனுக்கும் கூச்சம்கிடயாது தூ................இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாயப்போகட்டும்...........................

RK Anburaja said...

திரு கோபாலகிருஷ்ணன் அவர்களே.!

உங்களை விட ஈழபோராட்டத்தை ஆதரிப்பவன் நான். ஆனால் அது ஆளும் காங்கிரஸ்(சோனியா) கட்சி மீது மட்டுமே தவிர; ஒட்டு மொத்த இந்தியா மீது அல்ல..

வச்ச குறி தப்பாது.. மாமூ

Ad