Saturday, March 12, 2011

கருணாநிதி பற்றி அண்ணா - ஒரு பிளாஷ்பேக்

"நாங்கள் திராவிடர் கழகத்தில் இருந்தபோது திருவாரூருக்கு ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அப்போது ஒரு மாணவனாக இருந்த கருணாநிதியை அங்கே சந்தித்தேன். அந்தப்பருவத்திலேயே அவனுடைய குறும்புத்தனமான பேச்சு எனக்கு கோபத்தை உண்டாக்கியது. அதே நேரத்தில் வியப்பாகவும் இருந்தது. அப்போது என்னருகிலேயே தம்பி சம்பத்தும் இருந்தான். திரும்பிசெல்லும்போதும் கூட கருணாநிதி பற்றி சம்பத்திடம் பேசிக்கொண்டே போனேன்.

அதன் பிறகு ஒரு சிறிய பத்திரிக்கையின் மூலம் அவன் திராவிடக் கழக தோழர்களுக்கு அறிமுகமானான். அந்தப் பத்திரிக்கையின் பெயரும் 'முரசொலி' தான். சிறு வயதிலேயே அவனிடம் எழுத்துக் கவர்ச்சி இருந்தது. அதே நேரத்தில் கவர்ச்சிகரமாகவும் உருக்கமாகவும் பேசப் பழகி வைத்திருந்தான். கலைத்துறையில் ஈடுபாடிருந்ததால் ஜனங்களுக்கு அறிமுகமானான்.

1949 -ல் திராவிடர் கழகத்தை விட்டு நாங்கள் பிரிந்து தி மு க ஆரம்பித்தபோது முன்னணியிலிருந்த முக்கியஸ்தர்களில் ஒருவனாக அவன் விளங்கினான். என்னைப் பற்றி பேசிப்பேசியே அவன் தன்னை வளர்த்துக்கொண்டது ஒரு வகையான திறமையும் சாமர்த்தியமும் ஆகும். கலைத்துறை ஈடுபாடு அவனை வெகுவிரைவில் தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டது.

கடுமையாக உழைப்பான். எதிலும் தானே முன்னணியில் நிற்க வேண்டுமென்று ஆசைப்படுவான்.

இந்த நேரத்தில் இங்கிலாந்து அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றி அவர் மகன் சொன்ன கருத்து என் நினைவுக்கு வருகிறது,

" பாருங்கள்! என் தந்தை பிரசவித்த வீட்டுக்குப் போனால் தானே குழந்தையாக இருக்க ஆசைப் படுகிறார். பொதுச் சபைகளுக்குப் போனால் தானே தலைவனாக இருக்க ஆசைப் படுகிறார். கல்யாண வீட்டுக்குப்போனால் தானே மாப்பிள்ளையாக இருக்க விரும்புகிறார். கருமாதி வீட்டுக்குப் போனாலும் தானே பிணமாக இருக்க ஆசைப் படுகிறார்" என்றாராமவர்!

கருணாநிதியின் சுபாவம் அப்படிப்பட்டது. அவனது உழைப்பை ஆசை முந்திக்கொண்டு போகிறது.

தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எந்த வழியையும் கடைப்பிடிப்பது அவனுடைய சுபாவம், .அதிலே தோல்வியுற்று அவமானப்பட நேர்ந்தால் அதையும் ஜீரணிப்பது அவன் பழக்கம்.

தனக்கு விளக்கு தூக்குகிறவர்கள் மட்டுமே நண்பர்களாக இருக்க முடியுமென்பது அவன் சித்தாந்தம்.

பிறரை தூண்டிக் காரியம் செய்வான். கலகம் செய்வான். தான்தான் காரணம் என்பதைக் காட்டிக் கொள்ள மாட்டான், கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதற்கு அவன் உண்டாக்கிய கலகமே காரணம். அவர்களெல்லாம் என்னை விசுவாசித்தவர்கள். அவர்களெல்லாம் போன பிற்பாடு என்னையே அவன் ஆட்டிப்படைக்கத் தொடங்கினான். கட்சிக் கட்டுப்பாடுக்காக அதை வெளியே சொல்ல நான் தயங்கினேன்.

கட்சி எப்படிப்போனாலும் பதவிக்கு வந்தாக வேண்டுமென்று கூட்டணி சேர்ப்பதில் அவன்தான் முன்னணியில் இருந்தான்.

பதவிக்கு வந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலாகா பிரித்துக் கொடுத்தேன். இந்த இருபத்திமூன்று மாதங்களில் மற்ற மந்திரிகளுக்கும் சில இலாக்காக்கள் இருப்பதாகவே அவனுக்கு நினைவில்லை.

எல்லாவற்றிலும் புகுந்து விளையாடினான்.

போலீஸ் மந்திரி நான். உத்திரவிடுவது அவன்.

சகிக்கும்மட்டும் சகித்துப் பார்த்தேன். இனி சகிக்க முடியாது என்ற நிலை வந்தபோது - இறைவா, நீ வாழ்க - நீ என்னை அழைத்துக்கொண்டு விட்டாய்.

அனுசரித்த சம்பிரதாயங்களின் படி முதலமைச்சராக வேண்டிய நெடுஞ்செழியனை இப்போது அவன் ஒதுக்கித் தள்ளி விட்டான்.

நானிருக்கும் காலத்தில் தன் குடும்பக் கவலைகளைக் கூட நெடுஞ்செழியன் என்னுடன் தான் பகிர்ந்து கொள்வான். இப்போது யார் இருக்கிறார்கள்? யாரிடம் போய் அவன் சொல்ல முடியம். அவனைப்போல என் கட்சியில் என்னை நேசித்தவர்கள் எல்லாம் இனி உள்ளுக்குளேயே புழுங்கிச் சாவதைத் தவிர வேறு வழி என்ன?

கருணாநிதியின் கையில் ஆட்சி வந்து விட்டது. நான் இல்லை என்ற நினைப்பிலாவது அவனுக்கு பொறுப்புணர்ச்சி வரவேண்டும். சேறு மிதிப்பது போல ஆட்சியை நடத்தக் கூடாது. அவன் என்ன செய்யப் போகிறானோ?

போதாக் குறைக்கு ஆதித்தன் வேறு பங்காளியாகி இருக்கிறான். நான் இருக்கும்போது ஆதித்தனை ஒதுக்கியே வந்தேன். இனி எவனும் ஆட்டம் போடுவான்.

இனி ஜனங்களிடமிருந்தும் கிஞ்சித்தும் அனுதாபத்தை அவர்கள் பெறமுடியாது.

-- மனிதன் பேசி முடித்தான்; தேவன் விடைப் பெற்றுக்கொண்டான்..


பிகு: கண்ணதாசன் அவர்கள் சி. என். அண்ணாதுரை அவர்கள் மறைந்த பின் தன் பத்திரிக்கையில் சில கடிதங்கள் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு 'சொர்க்கத்தில் அண்ணா' என்று பெப்ரவரி 28 - 1969 அன்று ஒரு சிறு புத்தகமாக கண்ணதாசனுடைய தம்பி இராம முத்தையா அவர்களால் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தில் 'கருணாநிதி பற்றி அண்ணா' என்று 37-40 பக்கங்களில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையே இது.

மேலும் படிக்க: http://idlyvadai.blogspot.com/2011/03/blog-post_12.html

Ad