Friday, March 2, 2012

யார் இந்த எஸ்.பி.உதயகுமார்?


இந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு, எத்தியோப்பியாவில் ஆறு வருடங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தார். பிறகு, அமெரிக்காவின் நாடர் டேம் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
Udaya_250இவரின் தந்தை அரசியலில் ஆர்வம்கொண்டவர். இவரின் தாய் சமூகப் பணியாளராக இருந்தவர். அந்த உந்துதலினால், அரசியலுக்காகவும் மக்களுக்கான அறிவியலைக் கொண்டுசெல்லவும் பல விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.
இவர் அணுசக்திக்கு எதிராகப் போராட தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இவரின் தாத்தா, பாட்டி நால்வரில் மூன்று பேர் புற்றுநோய் தாக்கி இறந்தனர். அதற்குக் காரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய மணல் போன்ற கனிமங்களில் இயற்கைக் கதிர் வீச்சு அதிகமாக இருப்பது. அதைத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகச் சுரண்டச் சுரண்ட... அங்கே இருந்த மக்களுக்குப் புற்றுநோய் அதிகம் தாக்கியது. அந்தச் சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை, கன்னியாகுமரி முதல் ஆலப்புழை வரையில் உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் புற்று நோய் உள்ளது!
களப்பணியில் மட்டும் இன்றி, இவரை அணு சக்திக்கு எதிராக எழுதவும் ஊக்கம் தந்த பேராசிரியர் எபினேசர் பால்ராஜும் புற்றுநோயால் இறந்தார். எனவே, 'புற்றுநோய் கல்வி’ என்கிற புத்தகத்தை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறார் சுப.உதயகுமாரன்.
'தி கூடங்குளம் ஹேண்ட் புக்’, 'கான்ஃப்ரன்டேஷன்ஸ் ஆஃப் டிசாஸ்டர்’, 'கிரீன் பாலிட்டிக்ஸ் இன் இண்டியா’ ஆகிய புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். 'அசுரச் சிந்தனைகள்’ நூலின் தொகுப்பாசிரியர். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் பல்வேறு இதழ்களில் அணு சக்திக்கு எதிரான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். சமாதானம் மற்றும் சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தும் கல்விச் சாலை ஒன்றினை மனைவியுடன் இணைந்து நாகர்கோவிலில் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் சமூகப் பணி என்கிற தளத்தில் முன்னோடியாக இருப்பவர்களில் ஒருவரான ஒய்.டேவிட் தலைமையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அணுசக்திக்கு எதிரான இயக்கங்களை ஒன்று திரட்டி 2009-ல், 'அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. தற்போது அதன் தலைவராக இருந்து, சுற்றுச்சூழலுக்காகவும் சக மனித நலனுக்காகவும் போராடி வருகிறார் நம் உதயகுமாரன்!

கீற்று - டீனா ஜோசப் (29.02.2012) 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு ! நன்று !

Ad