Friday, March 8, 2013

ஹியூகோ சாவேஸ்: ஒரு சகாப்தத்தின் முடிவு ...

ஹியூகோ சாவேஸ்


1999 தொடங்கி வெனிசூலாவின் அதிபராக நீடித்துவரும் ஹியூகோ சாவேஸ் (ஜூலை 28, 1954-மார்ச் 5, 2013) இன்று அதிகாலை மரணமடைந்தார். தலைநகரம் காரகாஸில் நடைபெறவிருக்கும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள்  கலந்துகொள்வார்கள் என்று வெனிசூலா எதிர்பார்க்கிறது. அவர்களில் பலர் சாவேஸின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் பயன் பெற்றவர்கள். சாவேஸின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி வீதிகளில் இந்த நிமிடம் இவர்கள் கதறியழுவதை டிவி காமிராக்கள் காண்பித்துக்கொண்டிருக்கின்றன.

கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்குப் பல முறை மரணமடைந்துவிட்ட தனது 86 வயது அரசியல் ஆசானை சாவேஸ் முந்திகொண்டுவிட்டார்.  2005ல் கிரான்மாவுக்கு அளித்த பேட்டியொன்றில்  ’ஃபிடல் எனக்குத் தந்தையும் தோழரும் ஆவார்.’  என்று சாவேஸ் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அரசியல் மேடையில் இரட்டையர்கள் போல் இருவரும் கம்பீரமாக வலம் வந்ததை மகிழ்ச்சியுடனும் கலக்கத்துடனும் தரிசித்தவர்கள் ஏராளம்.

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் ஹியூகோ சாவேஸுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. க்யூபாவில் நிலவுவது மக்கள் விரோத அரசு, எப்பாடுபட்டாவது அதைத் தூக்கியெறிந்தே தீரவேண்டும் என்று காஸ்ட்ரோ முடிவு செய்தார். அதே முடிவுக்குத்தான் வெனிசூலாவில் சாவேஸும் வந்து சேர்ந்தார். காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் ஆயுதப் பேராட்டத்தைக் கையில் எடுத்தார். இருவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிறகு இருவருமே தங்கள் தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டனர்.


காஸ்ட்ரோ தனது பலத்தை க்யூபாவின் தேசத் தந்தையான ஹொசே மார்த்தியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். சாவேஸ் வெனிசூலாவின் போராளியான சிமோன் பொலிவாரைத் தனது முன்மாதிரியாக வரித்துக்கொண்டார். மார்த்தியை ஓர் சக்திவாய்ந்த அடையாளமாக காஸ்ட்ரோ உருமாற்றியதைப் போலவே பொலிவாரின் பெயரால் மக்கள் நலத் திட்டங்களை அறிமுகம் செய்து அவரை லத்தீன் அமெரிக்கா முழுமைக்கும் கொண்டு சேர்த்தார் சாவேஸ்.


மக்களை வழிநடத்த இரவரும் கையாண்ட சித்தாந்தமும் ஒன்றேதான். சீனாவுக்கு ஏற்றபடி மார்க்சியத்தைப் பொருத்திப் பார்த்த மாவோவைப் போல், ரஷ்யாவுக்கு ஏற்றபடி மார்க்சியத்தைத் தகவமைத்த லெனினைப் போல் லத்தீன் அமெரிக்காவுக்கான நடைமுறை சோஷலிசப் பாதையை வகுத்ததில் காஸ்ட்ரோவுக்கும் சாவேஸுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு.

ஆட்சிக்கு வந்ததுமே, அமெரிக்கவின் நிழலாகச் செயல்பட்டு வந்த சர்க்கரை நிறுவனங்களை காஸ்ட்ரோ ஒழித்துக்காட்டினார். சாவேஸ், எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்கினார். இருவரும் இதற்காகச் சந்தித்த எதிர்ப்புகள் அசாதாரணமானவை. மருத்துவம், கல்வி, அயலுறவு என்று க்யூபாவும் வெனிசூலாவும் பல முக்கியத் துறைகளில் ஒன்றிணைந்து நடைபோட்டன.

இருவருக்குமே எதிரி ஒன்றுதான். நோக்கமும் ஒன்றே. அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்தைக் குறைந்தபட்சம் லத்தீன் அமெரிக்காவிலும் முடிந்தவரை உலகம் முழுவதிலும் இருந்து அகற்றவேண்டும் என்பதுதான் அது. தங்கள் எதிரியை இருவரும் அதிகபட்ச சீற்றத்துடனும் பலத்துடனும் கையாண்டார்கள். அதனாலேயே ஏராளமான எதிரிகளையும் எதிர்ப் பிரசாரங்களையும் சம்பாதித்துக்கொண்டனர்.

இடதுசாரிகளிலேயேகூட பலர் ஃபிடல் காஸ்ட்ரோவை ஒரு கம்யூனிஸ்டாகவோ சோஷலிஸ்டாகவோ ஏற்கமாட்டார்கள். மார்க்சியத்தை அவர் தத்துவார்த்தரீதியாக எந்த வகையிலும் செழுமைப்படுத்தவில்லை என்பது அவர்கள் முன்வைக்கும் காரணங்களில் ஒன்று. 21ம் நூற்றாண்டு சோஷலிசத்தை முன்னெடுத்த சாவேஸையும் இதே காரணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரித்தவர்கள் பலர்.

தெளிவான அரசியல் பார்வையுடன் இயங்கும் ஒவ்வொருவருக்கும் நண்பர்களும் எதிரிகளும் இருக்கவே செய்வார்கள்.  யார் ஏற்கிறார்கள், யார் நிராகரிக்கிறார்கள் என்பதைப் பொருத்தே அவருடைய பணிகள் மதிப்பிடப்படுகின்றன. இந்த அளவுகோலின்படி, காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் பெரும்பான்மை மக்களின் தலைவராகவும் தோழராகவும் திகழ்கிறார். அதனால்தான் தங்கள் நாட்டு எல்லைகளைக் கடந்தும் இந்த இருவருக்கும் பெரும் திரளான மக்கள் ஆதரவு திரண்டு நிற்கிறது.
ஹியூகோ சாவேஸின் மரணம் லத்தீன் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்குமே ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.

மேற்கொண்டு வாசிக்க :


(நன்றி: மருதன் - தமிழ் பேப்பர்)

No comments:

Ad