Sunday, May 18, 2014

காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்?

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியை தொடர்ந்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்ய முன்வரலாம் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அதனை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 206 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு தாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் முடிவு வெளியான அன்று தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "மக்கள் தீர்ப்பு எங்களுக்கு எதிராக உள்ளது...காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ராகுல் காந்தி கூறுகையில், " காங்கிரஸ் மோசமாக தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் நிறைய சிந்திக்க வேண்டியதுள்ளது. கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் தோல்விக்கு நானும் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்" என்றார்.

இந்நிலையில் வருகிற திங்கட்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தாங்கள் கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருப்பதுதான், ராஜினாமா செய்வதாக அறிவிக்கக்கூடிய நிலைக்கு சோனியாவையும், ராகுலையும் தள்ளியிருப்பதாகவும், இருப்பினும் இந்த ராஜினாமா அறிவிப்பு ஒரு சம்பிரதாய அறிவிப்பாக மட்டுமே இருக்கும் என்றும், கட்சித் தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக பேசும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், "ஒருவேளை சோனியா மற்றும் ராகுலின் ராஜினாமாவை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், கட்சியை எதிர்காலத்தில் தோளில் சுமந்து, வெற்றி தேடித்தரக்கூடிய வல்லமை மிக்க தலைவர் காங்கிரஸில் வேறு யார் உள்ளார்? மறுபடியும் நாங்கள் பிரியங்காவிடம்தான் போய் நிற்க வேண்டும். ஆனால் அவருக்கு எந்த அளவுக்கு தீவிர அரசியலில் ஆர்வம் உள்ளது என்று தெரியவில்லை. மேலும் கட்சியை தலைமையேற்று நடத்தி செல்லவும் அவர் தயாராக உள்ளாரா என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் ராகுல் காந்தி இந்த தோல்விக்காக சோர்ந்து போகக்கூடாது. கடந்த 1999 ஆம் ஆண்டும் இதுபோன்றுதான் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. ஆனால் அந்த விளிம்பிலிருந்தும் கட்சியை வளர்த்து 10 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் அளவுக்கு தனது தாயார் சோனியா கொண்டுவந்தார் என்பதை மனதில் கொண்டு, தொடர்ந்து கடுமையாக உழைத்தால், இப்போது இல்லையென்றாலும், அடுத்த முறை அவர் தன்மீது ஏற்பட்ட களங்கத்தை போக்கி நாட்டின் உயரிய பதவியிலும் அமர முடியும்" என்று கூறுகின்றனர்.

இதனிடையே நேரு - காந்தி குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமான தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைசேர்ந்த மணி சங்கர் அய்யரோ, " இந்த சூழ்நிலையில் காந்தி குடும்பத்தை கைவிடுவது என்பது காங்கிரஸ் செய்யும் மிக முட்டாள்தனமான காரியங்களில் ஒன்றாக அமையும்" என்று கூறியுள்ளார்.

ஆனால் காந்தி குடும்பத்தின் பரம்பரை பிடியிலிருந்து காங்கிரஸ் விடுபட வேண்டும் என்றும், அதற்கு இதுவே தக்க தருணம் என்றும் கூறும் டெல்லி பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியரும்,  அரசியல் ஆய்வாளருமான துபே, "காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்தி, ஆரோக்கியமான ஜனநாயக அரசியல் தலைமையை ஏற்படுத்திக்கொண்டு, ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்க இதுவே தக்க தருணம். அப்படி செய்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல.. நாட்டிற்கும் நல்லது. ஏனெனில் இந்த ஒரு தேர்தல் தோல்விக்காவும், குடும்ப அரசியல் மீதான வெறுப்புக்காகவும் காங்கிரஸை ஒதுக்கி தள்ளிவிட முடியாது.

அந்த கட்சிதான் நாடு முழுவதும் கிராம அளவில் கட்சி வேர்களை கொண்ட, ஒரு முறையான கட்டமைப்பை கொண்ட, மக்கள் அறிந்த இயக்கம். இன்று மோடி தனிப்பெரும்பான்மை பெற்ற பலத்துடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், அறுதிப்பெரும்பான்மை இருக்கிற தைரியத்தில் இந்த நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமான காரியங்களில் ஈடுபட்டால், அதனை வலுவாக எதிர்த்து போராடவும்,  தட்டிகேட்கவும்,  மக்கள் வெறுக்கும் காரியங்களில் ஈடுபட்டால், தேசிய அளவில் அடுத்த மாற்று கட்சியாக காங்கிரஸ்தான் முதலிடத்தில் உள்ளது.  எனவே அக்கட்சி தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்கிறார்.

ஆனால் ராஜீவ் காந்தி மறைவுக்கு பின்னர் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது. அதாவது நேரு -காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து காங்கிரஸ் விடுபட்டு, சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், பல மாநிலங்களில் காங்கிரஸ் கரைந்துகொண்டிருந்தது. இறுதியில் "சோனியாவே சரணம்...!" என காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் காந்தி குடும்பத்தின் முன் தண்டனிட்டதை பார்த்தால்,  காந்தி  குடும்பத்தின் பிடியிலிருந்து காங்கிரஸ் அவ்வளவு சுலபத்தில் விடுபடும் எனத் தெரியவில்லை!

- பா. முகிலன் 

No comments:

Ad