Friday, December 4, 2009

அத்வானி - கிழக்கின் புத்தகம்

அத்வானி - காவிய நாயகனின் கதை

கிழக்கின் ஆர்.முத்துக்குமார் எழுதிய இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில சுவாரஸியங்கள்: 
அறிமுகம்

ரத்தபிரிவுக்கு அவரவர் விருப்பப்படி பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால் போதும்., அத்வானி  துளியும் யோசிக்க மாட்டார். என்னுடைய ரத்தபிரிவு ஆர்.எஸ்.எஸ் பாஸிட்டிவ் என்று பகிரங்கமாக சொல்லிவிடுவார். அத்தனை தீவிரமான் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அவர். என்ற ஆர்.முத்துக்குமாரின் எளிய அறிமுகத்தை வேறு யாரும் அவருக்கு இனி தர முடியாது., என்றே எண்ணுகிறேன்.

தனக்கு விருப்பமான் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்ற அடையாளத்தால் அதிகம் நேசிக்கப்பட்டவர் அல்ல அத்வானி. துவேஷிக்கப்பட்டவர். அதற்காக எந்த ஒரு தருணத்திலும் அவர் வருந்தியதே இல்லை.! ஏனெனில் அவரின் அடையாளம் அது! என்ற வார்த்தைகள் சத்தியம் நிறைந்தவை. 

இளமை காலம்

இன்றைய கராச்சி நகர், அன்றைக்கு சிந்து மாகாணம்., இந்த நிலப்பரப்பு தான் அத்வானியை நமக்கு தந்த பூமி. ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டோடு இருந்தவரை, அரசியல் களத்திற்கு அழைத்து வந்த பெருமை ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகாக்களையே சாரும். ராஜ்பால்ஜியின் வழிகாட்டுதலில் அவருக்கு போதிக்கப்பட்ட முதல் மந்திரம் நான் ஹிந்து.! ஹிந்து..!

பிரிவினை என்பதை அடியோடு நிராகரிக்கும் ஆர்.எஸ்.எஸ் மீது., அத்வானிக்கு ஈர்ப்பு அதிகரிக்க தொடங்கியது. அது தான் இன்று வரை ஆர்.எஸ்.எஸ் ஊழியராக வைத்திருக்கிறது. 

கோட்ஸே - ஆர்.எஸ்.எஸ் காரர் இல்லை

கோட்ஸே முதலில் ஆர்.எஸ்.எஸ்-ல் தான் இருந்தார். ஆனால் அவரின் வேகத்துக்கு இயக்கம் ஈடுகொடுக்கவில்லை என்பதால்.,கூடாரம் மாறினார். வீர் சாவர்க்கரின் ஹிந்த் மாகாணசபை அவரை வரவேற்று விருந்தே வைத்தது. மென்மையாக சொன்னால் கோட்ஸே ஒரு இந்து பக்தன். உண்மையை சொல்லபோனால் அவர் ஒரு இந்து வெறியன். இந்த ஒரு வரியே போதும்., திருக்குறள் மாதிரி ஓரிரு வரிகளில் ஆர்.முத்துக்குமாரின் நறுக்குகள் ரசிக்கவைக்கின்றன.

காந்தி கொலைக்கு காரணம்., அவர் முஸ்லீம்களை அதிகம் தாங்குவது தான் என்ற எண்ணம், ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., இந்து மாகாண சபை தொண்டர்களிடையே (பக்தர்களிடையே) இருந்தது. கோட்ஸேவின் வெறி பிரிவினையின் போது அதிகமானது.

1947-க்கு பிறகு இந்தியா வசம் 400 கோடி ரூபாய் இருந்தது. அதில் 75 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கொடுப்பதாக ஒப்பந்தமானது. உடனே 20 கோடி ரூபாயை கொடுப்பது, மீதி தொகையை நிறுத்தி வைப்பது என்று. ஆனால் காந்தி இதை கண்டித்து உண்ணாவிரதமிருந்தார்., பலன்: 55 கோடி ரூபாயும் உடனே வழங்கப்பட்டது. இது தான் உச்ச கட்ட கோபத்துக்கு காரணம். விழைவு: காந்தி கொலை. இதை விரிவாக கூறிய ஆசிரியர்., இந்த பணத்தை வைத்துக்கொண்டு தான் பாகிஸ்தான் இந்தியா மீது 1948-ல் படையெடுத்ததை கூற மறந்துவிட்டாரோ! அப்படி பார்க்கையில் கோட்ஸேவின் கோபம் சரியானது தானோ!!? 

அரசியல் பக்கம்

ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாரதிய ஜனசங்கம், ஜனதா மோர்ச்சா, ஜனதா என்று மாறி மாறி அவரின் அரசியல் பாதை மிக நீண்டது., ஆனால் வலிகளும் நிறைந்தது. உபாத்யாயாவிற்கு பிறகு கட்சியை வழிநடத்தும் பொருப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்திலிருந்தே மொரார்ஜி தேஸாய், சரண் சிங், வி.பி.சிங், சந்திர சேகர் என்று இவர் மீதும் பா.ஜ.க மீதும் ஏறி சவாரி செய்தவர்களே அதிகம். ஆனால் அவர்கள் கூட காரியம் முடிந்ததும்,  இவரையும் கட்சியையும் தூக்கி எரிந்த போதுதான்., வாங்கிய அடியின் வலியை கூட இவரால் உணரமுடிந்தது.

வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு  உயர்ந்தது. இப்புத்தகத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அத்வானியின் அரசியல் பக்கங்கள் தான். அந்த அளவுக்கு ஆழ்ந்த அரசியல் அனுபவம் அவருக்கு..!

எமர்ஜென்சி, மிசா காலத்தில் இருந்து மீண்டு., கட்சியை கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொருப்புகள் ஒப்படைக்கப்படும்., ஏனெனில் எதற்கும் கலங்காதவர் இவர்.திறமைசாலி., உறுதியானவர் என்று கட்சியில் அனைத்து தரப்பினரிடமும் பெயரெடுத்தவர்.

ராமர் ஆலயம்

பஜனை செய்வதற்காகவோ, கீர்த்தனை பாடுவதற்காகவோ அயோத்திக்கு செல்லவில்லை. அந்த இடத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்வதும் நோக்கம் இல்லை. கரசேவை. கரசேவை. அது மட்டும் தான் ஒரே இலக்கு.
1992-ல் அத்வானி கூறியது இது தான்.

தேர்தலில் வெற்றி கிடக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கோஷத்தை உச்சஸ்தானியில் ஒலிக்க தொடங்கினார் அத்வானி. அது தான் நேரம், உ.பி-யில் பாஜக ஆட்சி. வேறு என்ன வேண்டும். தொடங்கினர், ரத யாத்திரையை, குமிந்தனர் ஹிந்துக்கள் அயோத்தியில். பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கே ராமர் ஆலயம் கட்டும் பணி கரசேவைக்காக...!

எல்லோரு எதிர்பார்த்தது போல்., பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது டிச.6.  தேசிய அவமானம் என்றார் அன்றைய பிரதமர் நரசிம்மராவ். ஆனால் அதற்கு நரசிம்மராவின் மௌனமும் முழுக்காரணம் தான்., இதை பதிவு செய்ய ஆசிரியர் ஏன் மறந்தார்?!! அத்வானி மீதும், பாஜக மீதும் மட்டுமே குற்றம் சுமத்துகிறார்., தற்போதைய லிபரான் கமிஷன் அறிக்கை போன்று. ஏன் என்று தெரியவில்லை. 

எமர்ஜென்சி காலம்

இதற்கு முந்தைய பக்கங்களில் இந்திராவின் எமர்ஜென்சி, மிசா கொடுமைகள் பற்றி மிக..........மிக........ விரிவாக் விவரித்து உள்ளார். அதில் தெளிவாக நடுநிலையுடன் விவரித்துள்ளார். காமராஜ் பற்றியும் சில வரிகளில் தமிழக அரசியல் எட்டிப்பார்க்கிறது. அத்வானி பற்றிய மிசா கொடுமைகள் சொல்லப்படவில்லை. எதிர்கட்சியினர் 1,10,000 பேர் கைது, 253 பத்திரிக்கையாளர்கள் கைது, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் உரிமம் ரத்து போன்ற கொடுமைகளை பற்றி விரிவாக சொல்லவில்லை.

அத்வானிக்கு பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்தவர், எடுத்த வேகத்திலேயே முடித்துவிட்டார். ஏன் ? இன்னும் கூட சில பல பக்கங்களில் எழுதியிருக்கலாம். 

உறுதியான மனிதரை உலுக்கியவை

ஹவாலா மோசடி வழக்கில் சிக்கியது, அவரது வாழ்வில் ஏற்பட்ட முதல் சறுக்கல். அதை சமாளிக்க அவர் பதவியை ராஜினாமா செய்தது, குற்றமற்றவர் என நிரூபித்தது சூப்பர்.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல டிச,1999 -ல் நடந்த காந்தஹார் விமான கடத்தல் அரசின் அஸ்திவாரத்தையே உலுக்கியது என்பது உண்மையான உண்மை. தீவிரவாதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவித்து தான், 831 பயணிகளை மீட்டார். இந்த விவகாரம் மிஸ்டர்.கம்பீரம் இமேஜை காலிசெய்தது.

இத்தோடு போகவில்லை, நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் நடத்தப்பட்ட தாக்குதல், மேலும் அவரின் மன உறுதியை பாதித்தது. அதற்காக தீவீரவாதிகளை ஒடுக்கும் நோக்குடன் இவர் கொண்டு வந்த பொடா சட்டம் தேசிய அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் திட்டத்தின் சூத்திரதாரி அப்சல் குரு, இன்னும் தூக்கிலிடப்படாதது இச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்ப்பதே காரணம். இது மேலும் மும்பை தாக்குதல் 26/11 போன்ற கொடூரங்களுக்கு வழிவகுக்கும்.

ஜின்னா ஒரு தியாகி  - அத்வானி

ஜின்னா ஒரு துரோகி, அவரை பாராட்டி பேசியவரும் துரோகியே! என கட்சிக்குள்ளும், வி.ஹெச்.பி போன்றோரிடமும் கலகக்குரல் ஒலிக்கத்துவங்கியது. இது பற்றிஅத்வானி கூறியது: ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது, ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை. நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பாவம்!!இப்புத்தகம் பா.ஜ.க-வின் மிகப்பெரிய சாதனையான பொக்ரான் அணு ஆயுத சோதனையில் அத்வானியின் பங்கு பற்றி துளியும், மருந்துக்கு கூட விவரிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் கார்கில் போர் வெற்றி பற்றி மூச்சே விடவில்லை. விடுதலைக்கு பின் நடைபெற்ற போர்களில் நம் இந்திய தேசம் பெற்ற ஒரே போர்  வெற்றி : கார்கில் போர் தான்., அது பற்றி விபரங்கள் இல்லாதது ஓர வஞ்சனை.!! தான். மூன்றாவது குஜராத் கலவரம்.! இது அத்வானிக்கு ஒரு சர்சையை உண்டு பண்ணிய விவகாராம். வாஜ்பாய் - அத்வானி இடையே கூட கருத்து வேறுபாடு ஏற்பட்ட விவகாரத்தை ஓரிரு பக்கங்களில் முடித்திருப்பது ஏமாற்றம்.

 இருந்தாலும் அத்வானி - அரசியல் - வெற்றி - தோல்வி -ஆர்.எஸ்.எஸ். ஊழியர் - கோட்ஸெ - இந்திரா - என்று 1947 முதல் 2009 வரை ஓரளவுக்கு அலசியிருக்கிறார்., ஆசிரியர் ஆர்.முத்துக்குமார். என்னதான் ஒருவருடைய வாழ்க்கை வரலாறு பெருமையாக பல விஷயம் எழுதினாலும், விமர்சனம் எழுதுவோருக்கு குறை மட்டுமே கண்ணுக்கு தெரியும்.! நான் என்ன பண்ண., என்னுடைய (ஆசிரியரின்) பணி இதுவே!!   இப்புத்தகம் அத்வானி பற்றிய முழுமையான அரசியல் சாசனம் (எனக்கு தெரிந்த உவமை)

அத்வானி - சில வரிகள் 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ரதயாத்திரை கிளம்பிய போது இருந்த அதே வேகம் அத்வானியிடம் இன்னமும் இருக்கிறது. வீரியம் அப்படியே இருக்கிறது. நம்பிக்கை அப்படியே இருக்கிறது. 
என்ன ஒன்று..
அவருடைய கொள்கைகளும் அப்படியே இருக்கிறது..!
அது தான் கொஞ்சம் உதைக்கிறது......!!!


புத்தகம்: அத்வானி
ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 80/-


இப்புத்தகத்தை வாங்க:  அத்வானி - காவிய நாயகனின் கதை

1 comment:

sparkkarthi karthikeyan said...

மிக அருமையான விளக்கங்கள்.

Ad