Thursday, June 18, 2015

பேஸ்புக்கில் காதலித்துப் பார்..!


பேஸ்புக் தோழியை கவர நினைப்பாய்
அவளறியாமல் காதல் வளர்ப்பாய்
*
பச்சை தான் பிடிக்கும் உனக்கு
பாழாய்ப்போன Pink-ம் பிடிக்குமென்பாய்
*
ஒரு நாய் கூட
உன் profile-ஐ எட்டிப் பார்க்காது
அவளது profile-ஐ
100 முறை பார்ப்பாய்...
*
அவளிடுவது லைக் தான் ஆயினும்
அதை லவ் என்றே புரிந்துகொள்வாய்
*
விதம் விதமாய் Sticker தேடுவாய்,
அன்பொழுக Status போடுவாய்
*
சரக்கடித்தது போல் சிலிப்பிய காலம் போய்
அபினடித்தது போல் அன்புதான் மெய் என்பாய்
*
தோழியின் தோழி
தோழி ஆவாள்
தோழியின் தோழன்
எதிரியாவான்
*
அவள் அள்ளித் தெளிக்கும் status மெசேஜில்
எழுத்துப் பிழைகள் பொறுப்பாய்
கருத்துப் பிழைகள் மறப்பாய்
*
‘தல’ வெறியானாய் நீயிருந்தும்
அவளுக்காய் மாறி மாறி
‘தளபதி’க்கு தாவிடுவாய்
*
காக்கா முட்டை கண் உனக்கு
அதில், காந்த சக்தி இருப்பதாய் நினைப்பாய்
கண்ணாடிக்கு வாய் இருந்தால்
காரித் துப்பியிருக்கும், தெரியாதுனக்கு
*
மோடியைப் போல் செல்ஃபிகள் தட்டுவாய்
ராகுலைப் போல் உளறிக் கொட்டுவாய்
*
மைக்கேல் டி குன்ஹா நீ
அவளுக்கு மட்டும் குமாரசாமியாவாய்
*
தமிழே ததிங்கிணத்தோம் உனக்கு
ஆங்கில quote ஆயிரம் போடுவாய்
*
முன்பகலில் ‘ஓ கே கண்மணி’யும்
பின்னிரவில் ‘மரியானும்’
காதில் வந்து காதல் பாய்ச்சுவார்கள்
*
அவள் போடும் ஸ்டேட்டஸ்களுக்கு
முதல் லைக் உனதாய் இருந்திட
அலெர்ட்டாய் இருப்பாய், தவறின் தவிப்பாய்.
*
இன்னொரு ஆண்மகன் முதல் லைக்கிட்டிருந்தால்
அவனது profile-லை அலசி ஆராய்வாய்
எதிரியின் எண்ணிக்கையில் ஒன்று கூடும்
எதற்கிவன் வந்தான் என மனம் வாடும்
*
லைக்கும், ஷேரும், கமெண்ட்டும் மட்டுமே
புத்தியில் புதைப்பாய், காதல் விதைப்பாய்
*
Awesome, Super, Cute மூன்றுமே
தாய்மொழி வார்த்தையாய் மாறியே போகும்
*
நோட்டிஃபிகேஷன் பீப் ஒலி உனக்கு
காதல் காலிங் பெல்லாய் கேட்கும்
*
பேஸ்புக் பார்த்திட தூக்கம் குறையும்
KB-யாய், MB-யாய், டேட்டா கரையும்
உனக்குள் இருக்கும் சே குவாரா
மிஸ்டர் பீனாய் மாறிடக் காண்பாய்
*
லவ்வா? என்றுன் தோழன் கேட்பான்
குலுக்கித் திறந்த கோக் போல
உள்ளே பொங்கும் உந்தன் காதல்..
‘இல்லை’ என்று சிரித்து மறைப்பாய்
மறுமுறை கேட்டால் சொல்ல நினைப்பாய்
*
பாழாய்ப் போன அந்த பன்னாடை
‘சரி மச்சி’ என்று சொல்லிச் சென்றிட
கடன்காரத் தோழனை மனதாரத் திட்டுவாய்
கெட்ட வார்த்தைகள் ஆயிரம் கொட்டுவாய்
*
யாரோ போடுவார் மொக்கை போட்டோ
அவள் லைக்கிட, உடனே லைக்குவாய்
அவள் பெயர் அருகில் உன் பெயர் வந்திட
பார்த்து ரசிப்பாய்.. சிரிப்பாய்.. சிலிர்ப்பாய்
*
ஒருநாள் இடியாய் ‘engaged’ என்று
அவளது Status வந்திடப் பதறுவாய்
*
கண்கள் இருளும், கைகள் உதறும்,
நாக்கு உலரும், மனசு கதறும்
*
கனவாயிருக்கக் கூடாதா என
பொய்யாய் மனசு ஏமாற ஏங்கும்
*
இது வேறு profile-லோ என்று
Refresh செய்தாலும்
ஃபேஸ்புக் சனியன் அவள் profileஐ தான்
மீண்டும் மீண்டும் காட்டித் தொலைக்கும்.
*
மருகுவாய், உருகுவாய், ஐஸ்வாட்டர் பருகுவாய்
லாக் அவுட் செய்வாய், லாக் இன் செய்வாய்
புலம்பலாய் உனக்கு பலநாள் கழியும்
*
Relationship-ல் Married என வர
அவள் உனக்கில்லை என்பது புரியும்
*
மாடியில் அலைவாய், பீச்சில் திரிவாய்
சோகம் கொண்டாடிட தாடி வளர்ப்பாய்
(அது கூட உன்னிஷ்டப்படி உடனே வளராது)
*
இப்படியே இன்னும் சிலநாள் போகும்
இது தான் நிரந்தரம் என்றே தோன்றும்
*
‘3’ படத்தின் பாடல்கள் மட்டுமே
எப்போதும் ரிப்பீட் மோடில் ஓடும்
*
புலம்பல் ஸ்டேட்டஸ் தினமும் போடுவாய்
மெல்லச் சாக வழிகளைத் தேடுவாய்
டாஸ்மாக், சிகரெட் இவைகளை நாடுவாய்
மேகி நூடுல்ஸ் கூட தின்னுவாய்!
*
உன் சோக ஸ்டேட்டஸ் பதிவுக்கு
புரியாமல் உன் புதுத் தோழி லைக்கிட,
நம்பிக்கை வளர்ப்பாய்
தாடியை மழிப்பாய்
*
மீண்டும் இன்னொரு காதல் துளிர்க்கும்
நெஞ்சில் காதல் பூவை வளர்க்கும்
*
புது வரம் தந்திடும் நம் பேஸ்புக்கு
தெய்வமாய் தோன்றுவான் மார்க் ஸக்கர்பர்கு !

No comments:

Ad